50 பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் உடல் உறுப்பு தான பதிவு; முதலமைச்சர் பாராட்டு
சென்னை, ஆக. 19- உலக புகைப்பட தினத்தையொட்டி, தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் சார்பில், நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 50 புகைப்படக் கலைஞர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். இதையடுத்து செவ்வாயன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது உடல் உறுப்பு தானம் செய்த 50 புகைப்பட கலைஞர்களுக்கு அதற்கான பாராட்டுச் சான்றிதழை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். மேலும், தினசரி நீங்கள் என்னை புகைப்படம் எடுக்குறீர்கள். இன்று ஒருநாள் நான் உங்களை படம் எடுக்கிறேன் என்று உற்சாகமாக கூறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கலைஞர் ஒருவரிடம் இருந்த கேமராவை வாங்கி, அனைத்து புகைப்பட கலைஞர்களையும் ஒன்றாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தார். நாட்டிலேயே முதன்முறையாக 50 புகைப்படக் கலைஞர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய பதிந்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ராம், சங்கத்தின் தலைவர் எம்.வேதன், துணைத் தலைவர் பி.ஜோதிராமலிங்கம், ஆலோசகர்கள் எல்.முருகராஜ், ஆர்.ரவீந்திரன், ஷிபா பிரசாத சாகு, பிஜாய் கோஷ், இயக்குநர்கள் எஸ்.ராமச்சந்திரன், இதயதுல்லா, எஸ்.ரமேஷ், வி.எம்.சீனிவாசன், கோவிந்தராஜ், ரவிக்குமார், என்.சுரேஷ்கண்ணன், ம.மீ.ஜாபர் உசேன், எஸ்.கவாஸ்கர் (தீக்கதிர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, புகைப்படக் கலைஞர்கள் முதலமைச்சருக்கு புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினர்.