tamilnadu

img

தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை பாதுகாக்க தமிழக மக்கள் குரலெழுப்ப வேண்டும்... டி.கே.ரங்கராஜன் எம்பி வேண்டுகோள்

செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் துவங்கப்பட்ட  மத்திய அரசின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம்  துவக்க நிலையிலேயே மூடிவிட மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது.இந்நிறுவனத்தைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே நடத்திடவும் நிறுவனத்தைப் பாதுகாக்கவும் தமிழக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி தமிழக மக்க ளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக் குன்றம் ஒன்றியம் திருமணி கிராமத்தில் கடந்த2012ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசுமூலம் எச்பிஎல் நிறுவனம் மூலம் மிகப்பெரிய உயிர்காக்கும் தடுப்பூசி உற்பத்திதொழிற்சாலை அமைக்க முடிவுசெய்யப் பட்டது.  பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு “தேசிய முக்கியத்துவ திட்டம்” என்று இதற்கு ஒப்புதல் அளித்தது. நாட்டின் தடுப்பூசி தேவையில் 75விழுக்காடு எச்பிஎல் நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளப்படும்.மீதமுள்ள தடுப்பூசி மருந்துகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பலவகை தடுப்பூசிகள்
100 ஏக்கர் பரப்பளவில் 55,685 சதுர மீட்டர் பரப்பளவில் தடுப்பூசி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதில், திரவ பென்டாவலண்ட் தடுப்பூசி (எல்பிவி), தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி  ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, (எல்பிவிக்கு 40 எம்.டி.எஸ் மோனோவெலண்ட் + 100 எம்.டி.எஸ்). `ஹீமோபிலஸ் இன்ஃப்ளூ யன்ஸா வகை பி. ரேபிஸ் தடுப்பூசி, ஜப்பா னிய என்செபாலிடிஸ் மின் தடுப்பூசி, பி.சி.ஜி தடுப்பூசி உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு அதற்கான ஆய்வு தளவாடங்கள் அனைத்தும் நிறுவப்பட்டு தடுப்பூசிகள் தயாரிக்கும் வகையில் தயார் நிலையில் உள்ளது. 

திட்டச்செலவு அதிகரிப்பு 
இப்பணிகளில் பயோ டெக்னாலஜி பயின்ற வல்லுநர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவு ரூ.594 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் காலதாமதமானதால், 2017ம் ஆண்டில் ரூ.710 கோடியாகவும், 2019ம் ஆண்டில் ரூ.904.33 கோடியாக அதிகரித்தது. மீண்டும் திருத்தப்பட்ட ரூ.904.33 கோடியாகத் திட்டச் செலவு விரிவாக்க அறிக்கையை 2018ம் ஆண்டு சமர்ப்பித்தது. ஆனால், நிதி அமைச்சகம் திட்டத்தின் முன்மொழிவு சாத்தியமில்லை எனக்கூறி நிதி ஒதுக்க நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கண்ட நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையுடன் செயல்பட முடியாது எனத் தெரிவித்துள்ளது. இதனால்,  நிறுவனத்தில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழக்கும் நிலை உள்ளது. மேலும் பல ஊழியர்கள் வேறு இடங்களுக்குக் கட்டாயமாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் மேற்கண்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தைப் பார்வையிட்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தடுப்பூசி தொழிற்சாலைக்குத் தமிழக அரசு துணை நிற்கும் எனத் தெரி வித்திருந்தார்.  

டி.கே.ரங்கராஜன் ஆய்வு
இந்நிலையில்,மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங் களவை உறுப்பினருமான டிகே.ரங்கராஜன் வியாழனன்று (பிப் 27) தடுப்பூசி தொழிற்சாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், தடுப்பூசி தயாரிப்பதற்கான அனைத்து கட்டமைப்புகள் இருப்பதும் மற்றும் தடுப்பூசிகளை ஆராய்ச்சி முறையில் தயாரித்து மேம்படுத்துவதற்காகச் சோதனையில் வெற்றி பெற்றிருப்பதாகவும். ஆனால், தனியாருக்குத் தொழிற்சாலையைத் தாரைவார்ப்பதற்காக, காலதாமதம் என்ற தவறான தகவல்களை  மத்திய அரசு  அளித்து வருவதுடன் பணியாளர்களைக் கட்டாயமாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என  பணியாளர்கள் அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, தடுப்பூசி தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், ஆய்வகங்கள் மற்றும் தொழிற்சாலை முழுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர்,  மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார், எஸ்.கண்ணன், வா.பிரமிளா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.மோகனன், மபா.நந்தன் செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன், தொழிற்சங்க நிர்வாகிகள் பழனிச்சாமி, பகத்சிங்தாஸ், ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

பேட்டி 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் டிகே.ரங்கராஜன் எம்பி தெரிவித்ததாவது: திருமணியில் பலகோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்துஸ்தான் பயோ கெமிக்கல் நிறுவனம் இது பிரம்மாண்டமான நிறுவனம்,  2007ம் ஆண்டு துவக்கப்பட்ட  நிறுவனம் அது துவக்கப்பட்ட நிலையிலேயே  உள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் துவக்கப்பட்டுள்ள நிறுவனம் உலகம் முழுவதுக்கும் சேவை செய்வதற்காகத் துவங்கப்பட்ட நிறுவனம், துவங்கப்பட்ட நாளிலிருந்து உற்பத்தி துவங்கப்படாமல் இருப்பது வியப்பளிக்கின்றது. மத்திய அரசு நிதிஆயோக்சுகாதாரத்துறை, பிரதமர் அலுவலகம் இந்நிறுவனத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், இந்நிறுவனம் பொதுத்துறையாகவே நீடிக்க அனைத்து முயற்சியையும் எடுக்க வேண்டும். அடுத்த வாரம் டெல்லி செல்லும்போது  இந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை துறைசார்ந்த அலுவலர்களிடம் வலியுறுத்த இருக்கின்றேன். தமிழக அரசு சுகாதாரத் துறை  இந்த நிறுவனத்தைப் பாதுகாப்பது என்பது தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும். இங்கு பணியாற்றும் சேவை குணமிக்க பணியாளர்களாக உள்ளனர். நாட்டு மக்களுக்குப் பெரியளவில் பயன்தரக்கூடிய மிக மிக முக்கி யத்துவம் வாய்ந்த  தடுப்பூசி மருந்து தொழிற்சாலையைப் பாதுகாக்கத் தமிழக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.முன்னதாக தொழிற்சாலையில் பணியாற்றும்  ஊழியர்கள் கோரிக்கை மனுவை டிகே.ரங்கராஜனிடம் கொடுத்தனர்.

;