tamilnadu

img

இந்நாள் ஜன. 10 இதற்கு முன்னால்

1992 - வாட்டிகனுடனான தூதரக உறவுகளை, 117 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் அமெரிக்கா தொடங்கியது. இங்கிலாந்தில் கிறித்தவ மறுசீரமைப்பின்மூலம் பிராட்டஸ்டண்ட் பிரிவைத் தோற்றுவித்த ஆங்கிலேயர்கள், அமெரிக்காவில் குடியேறிய காலத்திலேயே கத்தோலிக்க எதிர்ப்புணர்வுடன்தான் இருந்தனர். அதனால், இங்கிலாந்தின் சில குடியேற்றங்களில் கத்தோலிக்கர்கள் குடியேறத் தடையும், சிலவற்றில் வாக்குரிமை மறுப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் இருந்தன. பல குடியேற்றங்களிலும், ‘திருத்தந்தை இரவு’ என்ற கத்தோலிக்கர்களுக்கு எதிரான விழாவே கொண்டாடப்பட்டுவந்தது. இது, பிராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த இங்கிலாந்தின் அரசரான (முதலாம்) ஜேம்ஸ் காலத்தில் 1605இல் நடத்த முயற்சிக்கப்பட்ட ‘வெடிமருந்துச் சதி’ என்ற தாக்குதலை முறியடித்ததற்காகக் கொண்டாடப்பட்ட விழா. போப்பின் நேரடி ஆட்சியிலிருந்த பகுதிகள் திருத்தந்தை நாடு(கள்) என்றழைக்கப்பட்டன. அமெரிக்கா விடுதலை பெற்றதும், தங்களை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகவே பெரும்பாலான நாடுகளுடனும் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டபோது, திருத்தந்தை நாட்டுடனும், 1797இல் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது. விடுதலைப்பெற்ற அமெரிக்காவில் பல நாட்டினரும் குடியேறிய நிலையில், ஏராளமான கத்தோலிக்கர்களின் வருகை, இந்த எதிர்ப்புணர்வை மீண்டும் தட்டியெழுப்பியது.

1865இல் ஆப்ரகாம் லிங்கன் கொலைச் சதியில், அமெரிக்காவில் முதல் பெண்ணாகத் தூக்கிலிடப்பட்ட மேரி சுராட் ஒரு கத்தோலிக்கர் என்பதுடன், அவர் மகன் திருத்தந்தையின் படைவீரராகவும் இருந்தது, இந்த எதிர்ப்பைப் பெரிதாக்கியது. இதற்கிடையே, வாட்டிகனிலிருந்த அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த பிராட்டஸ்டண்ட் வழிபாட்டையும் போப் தடைசெய்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, 1867இல் தூதரக உறவைத் தடைசெய்து அமெரிக்க நாடாளுமன்றம் சட்டமியற்றியது! வரலாற்றின் போக்கில் ஆட்சியதிகாரத்தை இழந்த திரு-ஆட்சிப்பீடம்(ஹோலி-சீ), 1929இல் வாட்டிகன் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1933இலிருந்து, பேச்சுவார்த்தைக்காக வாட்டிகனுக்கென்று பிரதிநிதிகளை அமெரிக்கா நியமிப்பது தொடங்கினாலும், தூதரக உறவுகளை ஏற்படுத்த 1951இல் எடுக்கப்பட்ட முயற்சிகள் பிராட்டஸ்டண்ட் பிரிவினரால் தோற்கடிக்கப்பட்டன. பொதுவுடைமைக்கு எதிர்ப்பு, போலந்திலிருந்து சோவியத் ஒன்றியத்தை வெளியேற்றுதல் ஆகிய பொதுவான நோக்கங்கள், ரீகனையும், போப் இரண்டாம் ஜான் பாலையும் நெருங்கச்செய்ததைத் தொடர்ந்து, வாட்டிகனுடனான தூதரக உறவுக்கான தடையை நீக்க 1983இல் சட்டமியற்றி, 1984 ஜனவரி 10இல் இருநாடுகளும் தூதரக உறவு தொடங்குவதாக அறிவித்தன.

- அறிவுக்கடல்

;