tamilnadu

img

இந்நாள் ஜன. 08 இதற்கு முன்னால்

1964 - ‘ஏழ்மையின் மீதான போர்’ என்பதை, குடியரசுத்தலைவர் உரையில், லிண்டன்-பி-ஜான்சன் அறிவித்தார். அமெரிக்காவில் அப்போது நிலவிய 19 சதவீத ஏழ்மையைச் சரிசெய்யும் நோக்கம்கொண்ட இவ்வுரையின் அடிப்படையில், பொருளாதார வாய்ப்புகள் சட்டம் என்பது நிறைவேற்றப்பட்டு, பொருளாதார வாய்ப்புகளுக்கான அலுவலகம் என்பதும் தொடங்கப்பட்டது. இதற்கு ‘மகத்தான சமுதாயம்’ என்று பெயரிட்டிருந்த ஜான்சன், ஏழ்மையின் அடையாளங்களை மறைப்பது தங்கள் நோக்கமல்ல, அதைக் குணப்படுத்துவதும், மீண்டும் வராமல் தடுப்பதுமே நோக்கம் என்றார். கல்வியிலும், சுகாதாரத்திலும் அமெரிக்கக் கூட்டரசின் பங்களிப்பை விரிவுபடுத்துவதன்மூலம்தான் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்று கருதிய அவர், ஏழைக் குழந்தைகளின் பள்ளிக் கல்வியையும், ஊட்டச்சத்தையும் உறுதிப்படுத்திய ‘ஹெட் ஸ்டார்ட்’ திட்டத்தை உருவாக்கிய, ‘தொடக்க, மேல்நிலைக் கல்விச் சட்டம்’, ஏழைகளுக்கு மருத்துவ வசதிக்கான ‘மெடிக்-எய்ட்’, முதியவர்களின் மருத்துவ வசதிக்கான ‘மெடிக்கேர்’ ஆகியவற்றை உருவாக்கிய ‘சமூகப் பாதுகாப்புச் சட்டம்’ ஆகியவற்றை இயற்றி, போதுமான நிதியும் ஒதுக்கினார்.

மொத்த வேலையின்மையைவிட, இளைஞர்களின் வேலையின்மை இரண்டு மடங்காக இருந்த நிலையில், ‘ஜாப் கார்ப்ஸ்’ என்ற திட்டத்தின்மூலம், பகுதிநேரப் பணியாற்றிக்கொண்டே, வேலைவாய்ப்புள்ள தொழில்நுட்பங்களைக் கற்றுத் தந்ததுடன், ‘சமூகச் செயல்திட்டம்’ உள்ளிட்டவைமூலம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. ஏழைகளுக்கான உணவுக் கூப்பன்கள் வழங்க, ‘ஃபுட் ஸ்டாம்ப் சட்டம்’ இயற்றப்பட்டது. ‘ஹெட் ஸ்டார்ட்’ திட்டத்தின்மூலம் தொடக்கக் கல்வி பெற்றவர்களுக்கு, அடுத்தகட்ட பயிற்சிகள் அளிக்க ‘ஃபாலோ த்ரூ’ என்ற திட்டமும் தொடங்கப்பட்டது. இவற்றின்மூலம், பத்தாண்டுகளுக்குள் ஏழ்மை விகிதம் 10 சதவீத மளவுக்குக் குறைந்தது. ஆனாலும், 1950களின் இறுதியிலேயே ஏழ்மை குறையத் தொடங்கியிருந்தது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த வியட்னாம் போரில், ஓர் எதிரி வீரரைக் கொல்ல 5 லட்சம் டாலர் செலவிடும் அரசு, ஓர் அமெரிக்கரின் நலனுக்கு வெறும் 53 டாலர்களைச் செலவிடு கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஊட்டச்சத்துள்ள உணவு, சுகாதாரமான இருப்பிடம், உடைகள் ஆகியவற்றுக்குத் தேவையான வருவாயை ஏழ்மைக்கான அளவு கோலாக நிர்ணயித்து, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், செலவுக்குறைப்பில் ஈடுபடுவதே வறுமையை அதிகரிக்கிறது!

;