tamilnadu

img

இந்நாள் ஜன. 07 இதற்கு முன்னால்

1904 - அபாயத்திலிருக்கும் கப்பல்களின் உதவிகோரும் சமிக்ஞையாக ‘சி.க்யூ.டி.’ என்பதை மார்க்கோனி பன்னாட்டு கடல்சார் தொலைத்தொடர்பு நிறுவனம் (சுற்றறிக்கை எண்.57) அறிவித்தது. கடலில் ஆபத்துக்குள்ளாகும் கப்பல்கள், (தேசிய)கொடியைத் தலைகீழாகப் பறக்கவிடுவதே, உதவிகோரும் சமிக்ஞையாகப் பல நூறாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகளின் கொடிகள் தலைகீழாக இருப்பதைப் புரிந்துகொள்வது சிரமமாக இருந்தது. ஜப்பான் உள்ளிட்ட சில நாடு களின் கொடிகளில் தலைகீழ் என்பதே இல்லை! சில நாடுகளின் கொடியைத் தலை கீழாக்கினால் மற்றொரு நாட்டின் கொடியாகிவிடும்(போலந்து-மொனாக்கோ)! இவற்றால், கொடியில் முடிச்சிட்டு, மேலிருந்துகீழாகத் தொங்கவிடுவது போன்ற முறை களும், மணிகள், சங்குகளை ஒலித்தல், சமிக்ஞைப் பிழம்புகளைக் கொளுத்துதல் உள்ளிட்ட முறைகளும் பின்பற்றப்பட்டாலும், இவை அதிகத் தொலைவிற்குச் சென்றடையவில்லை. 1890களில் கம்பியில்லாத் தந்தி நடைமுறைக்கு வந்தவுடனேயே கப்பல்களின் முக்கியத் தொடர்புமுறையாக மாறினாலும், ஒரு பொதுவான அபாய சமிக்ஞையை ஏற்பதில், நாடுகளுக்கிடையேயிருந்த முன்விரோதங்கள் தடையாக இருந்தன.

இந்நிலையில்தான், நிலத் தந்தியில் பயன்படுத்தப்பட்டுவந்த, ‘காப்பாற்றுங் கள்’ என்பதற்காக பிரெஞ்சுச் சொல்லான ‘செக்யூயரைட்’ என்பதிலிருந்து உருவான சி.க்யூ.(செக்யூ) என்பதுடன், ‘டிஸ்ட்ரஸ்’ என்பதற்கு டி-யைச் சேர்த்து, மார்க்கோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதையும் ஏற்காமல், 1905 ஏப்ரலில், ‘மூன்று புள்ளிகள்-மூன்று கோடுகள்-மூன்று புள்ளிகள்’ என்ற தந்தி(மோர்ஸ்) குறியீட்டை அபாய சமிக்ஞையாக ஜெர்மனி பயன்படுத்தத் தொடங்கியது. எழுத்துகளாக மாற்றினால், எஸ்ஓஎஸ் என்பதாக இருந்த இந்தக் குறியீட்டை, 1906இல் பெர்லினில் கூடிய, முதல் பன்னாட்டு கம்பியில்லாத் தந்தி மாநாடு, உலகளாவியதாக ஏற்றுக் கொண்டது. அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட மோர்ஸ் குறியீட்டில் மூன்று கோடுகள் ஐந்தைக் குறித்ததால், அங்கு எஸ்5எஸ் என்றும் இது குறிப்பிடப் பட்டது. கம்பியில்லா ‘ஒலி’பரப்புகள் வந்தபின், லண்டன் க்ராய்டன் விமானநிலை யத்தின் மாக்ஃபோர்ட் என்ற அலுவலர், ‘எனக்கு உதவுங்கள்’ என்ற பொருளுடைய பிரெஞ்சுச் சொல்லான ‘மேய்டர்’ என்பதிலிருந்து, ‘மேடே’(மேதினத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை!) என்ற அபாய சமிக்ஞையை 1921இல் உருவாக்க, அது 1927இல் பன்னாட்டு கம்பியில்லாத்தந்தி மாநாட்டில் ஏற்கப்பட்டது.

- அறிவுக்கடல்

;