tamilnadu

img

டிசம்பரில் சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் போராட்டம்

கோயம்புத்தூர்:
சுங்க சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

தமிழகத்தில் 46 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 18 சுங்கச்சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் 18 சுங்கச்சாவடிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இதில் ஒப்பந்தம் முடிந்து காலாவதியானசுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளில் பொது போக்குவரத்து வாகனங் களுக்கு பாஸ்டேக் முறைகளிலிருந்து விலக்களித்து இரண்டு லேன் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இலகுரக சரக்கு வாகனங்களான டாடா ஏசி, பிக் வேன், 407, மினி லாரிகள், ஈச்சர், டிசிஎம் மற்றும் பயணிகள் வாகனங்களான டூரிஸ் டாக்சி, மேக்சி கேப், கால் டாக்சி, சுற்றுலா வாகனங்களுக்கும் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கும் கெடுபிடி செய்யாமல் ஏற்கனவே இருந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். ஏற்கனவே மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, சரக்கு சேவை கட்டணம் உள்ளிட்ட தவறான பொருளாதார கொள்கைகள் மற்றும்மோட்டார் வாகன தொழில், மோட்டார் வாகனசட்டத்திருத்தம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் தினசரி வாடகையில்லாத சூழலில், மேற்படி வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடந்து சென்றுவர பாஸ்டேக் முறையிலிருந்து விலக்களித்து மோட்டார் தொழிலையும், தொழி லாளர்களையும் பாதுகாத்திட வேண்டும். இந்த கோரிக்கையை மத்திய, மாநிலஅரசுகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பாக டிசம்பர் முதல் வாரத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்டேக் 
பாஸ்டேக் கார்டு என்பது ஒரு ஐ.டி கார்டு போன்றது. இதை வாகனத்தின்  கண்ணாடியில் பொருத்திக் கொள்ள வேண்டும். இந்த கார்டிற்கு தேவையான அளவிற்கான பணத்தை முன்னரே செலுத்தி ரீசார்ஜ்  செய்து கொள்ள வேண்டும்.சுங்கச்சாவடியில் நுழையும் இடத்தில் ஒரு இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். அந்த இயந்திரம் வாகனத்தின் எண்ணை கண் இமைக்கும் நொடியில் கண்டறிந்து வருகையை பதிவு செய்யும். முன்னரே ரீசார்ஜ் செய்து வைத்திருந்த பணத்தில் இருந்து அந்த சுங்கச்சாவடிக்கான பணம் கழிக்கப்பட்டுவிடும். மேலும் அந்த பகுதியை அடைத்திருக்கும் தடுப்புக்கம்பமும்  தானாக திறந்துவிடும். பாஸ்டேக்கார்டுகள் எல்லா டோல்கேட்களிலும் கிடைக்கும். சில ஏஜென்சிகள் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

;