tamilnadu

img

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடன்? துப்பாக்கியில் சுட்டு காவலர் தற்கொலை  

கோவையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறை துறைக்கு சொந்தமான இடத்தில், அரசுப் பொருட்காட்சி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் அரசு துறைகளின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

இதில் கோவை மாநகர காவல் துறை கண்காட்சி அரங்கில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து (29) என்ற ஆயுதப்படை காவலர் வெள்ளியன்று பணியில் இருந்துள்ளார்.  

இந்நிலையில் வெள்ளியன்று மாலை திடீரென மாநகர காவல் துறை கண்காட்சி அரங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சென்று பார்க்கும் போது, காவலர் காளிமுத்து வயிறு மற்றும் முதுகு பகுதியில் தோட்டாக்கள் துளைத்த நிலையில் ரத்தக் காயங்களுடன் அரங்கிலிருந்து வெளியே வந்துள்ளார். காவலர் ஒருவர் இரத்தம் வடிய வருவதை கண்ட கண்காட்சியில் இருந்த ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  

இதையடுத்து விரைந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த காயங்களுடன் இருந்த காவலர் காளிமுத்துவை, பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சனியன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், காவலர் காளிமுத்துவுக்கு தில்லை நாயகி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர்.  இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காவலர் காளிமுத்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதனால் அவர் பலரிடமும் கடன் வாங்கியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் சுமார் 20 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாக தெரிய வந்தது. தொடர்ந்து, அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்ததையடுத்து, நகை உள்ளிட்ட பொருட்கள் அடகு வைத்து வாங்கிய கடனை அடைத்துள்ளார்.

இருப்பினும் மனஉளைச்சலுக்கு ஆளான காவலர் நேற்று பணியில் இருந்தபோது தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரிய வந்தது.  இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

;