tamilnadu

img

சிறையில் இருக்கும் கல்யாண ராமனை மீண்டும் கைது செய்த காவல்துறை

கோவை சிறையில் உள்ள கல்யாண ராமனை காவல்துறையினர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். 
மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த கூட்டத்தில், பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், இஸ்லாமிய அமைப்பினரைக் கடுமையாக விமர்சித்ததுடன், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்தது.
இதனால், சம்பவ இடத்துக்கு வந்து சில இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மேலும் சில இஸ்லாமியர்கள் அங்கு கூடி, கல்யாணராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது ஒருகட்டத்தில் கல்வீச்சாக மாறி, இருதரப்பினர் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால், பதற்றம் ஏற்பட்டது. உக்கடம், கோவை எஸ்.பி அலுவலகம், மேட்டுப்பாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்து, கல்யாணராமனைக் கைதுசெய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி மோதல் உருவாக்க முயற்சி செய்தல், தேசிய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க முயற்சி செய்தல் (IPC 147, 148, 149, 504, 506(2), 153(a), 153 (b), 269) உட்பட எட்டு பிரிவுகளின்கீழ் மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கல்யாணராமன் மற்றும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சதீஷ் ஆகியோரைக் கைதுசெய்துள்ளனர். கல்யாணராமன்  பிப்.1ம் தேதி அவிநாசி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு நேற்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை மீண்டும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்தபோது,  வேற்று மதத்தினர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதுாறு கருத்து வெளியிட்டதாக கல்யாணராமன் மீது, கடந்தாண்டு மார்ச் 20 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் குறித்து ரத்னபுரி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில், கல்யாணராமனை போலீசார் தற்போது பிடிவாரண்டில் கைது செய்துள்ளனர்
 

;