கோவை, ஜூலை 2- கோவையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேஜஸ் ஏர்கிராப்ட் குட்டி விமானத்தின் பாகம் தீப்பீடித்த படி விவசாய நிலத்தில் விழுந்தது. கோவையை அடுத்த இருகூர் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் ஏர்கிராப்ட் குட்டி விமானத்தில் வீரர்கள் செவ்வாயன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் தனியாக கழன்று, பீளமேடு - சூலூர் செல்லும் சாலையில் உள்ள நந்தகுமார் (34) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விழுந்து தீப்பிடித்தது. இதில், பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறி சுமார் 3 அடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்டது. மேலும், அதனுடைய பாகங்கள் விவசாய நிலங்களில் சிதறிக் கிடந்தன. பறந்து கொண்டிருந்த விமானத்தின் பாகம் ஒன்று கீழே விழுவதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே, தேஜஸ் ஏர்கிராப்ட் குட்டி விமானத்தில் 2 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு பெட்ரோல் டேங்கில் தீ விபத்து ஏற்பட்டதால், பாதுகாப்பைக் கருதி அதனைக் கழற்றி கீழே விட்டுள்ளதாக விமான பயிற்சித் துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் இதுபோன்ற பயிற்சி யில் ஈடுபடக்கூடாது. விவசாய நிலத்தில் பெட்ரோல் டேங்க் தீப்பிடித்ததுபோல் குடியிருப்பு களில் விழுந்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. ஆகவே மக்கள் நடமாட்டம் அற்ற பகுதியில் இதுபோன்ற பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.