tamilnadu

img

ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்ட அங்கன்வாடி மையம் குழந்தைகள் பாதுகாப்புக்காக மீட்கப்படுமா?

திருப்பூர், ஏப். 21 -திருப்பூர் மாநகராட்சி 2ஆவது வார்டு ஆத்துப்பாளையத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையக் கட்டிடம் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. குழந்தைகள் ஆரோக்கியத்தை பாதுகாக்க சுகாதாரமான சூழலில் இருக்க வேண்டிய அங்கன்வாடி மையம் மீட்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.திருப்பூர் முதலாவது மண்டலத்திற்கு உட்பட்ட 2 ஆவது வார்டில் அங்கன்வாடி மையம் உள்ளது. ஆனால் இந்த அங்கன்வாடி பள்ளியின் நுழைவாயில் முன் தனியார் ஒருவர் ஓடுகளை அடுக்கி வைத்திருக்கிறார். மற்றொருவர் துணி காயப்போடும் கம்பிகள் நட்டும், இன்னொருவர் பழைய சைக்கிளை நிறுத்தியும், பள்ளி பின்புறம் அதீத சிமெண்ட் சிலாப்பும், கருங்கல்லும், பழைய மரச்சாமான்களும் போட்டு வைக்கப்பட்டுள்ளன. இவை அசுத்தமாகவும், பூச்சிகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அடைக்கலம் புகும் இடமாகவும் காட்சியளிக்கின்றன. இதனால் அங்கன்வாடியில் தங்கும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய சூழலாக உள்ளது. அத்துடன் மாநகராட்சிக்கு உட்பட்ட பயன்பாட்டில் இல்லாத வாட்டர் டேங் உள்பட பலவித பொருட்களும் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. பல மாதங்களாக இந்த நிலை நீடிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கன்வாடி மையத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள மாநகராட்சி நிர்வாகம், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே மழலைகளின் நலன் கருதி எதிர் வரும் கோடை விடுமுறை நாட்கள் முடிவடைவதற்கு உள்ளாக இங்குள்ள ஆக்கரமிப்பை அகற்றுவதுடன், பள்ளி வளாகத்தைப் புதுப்பித்து மழலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களின் நலன் காக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.செவி சாய்க்குமா மாநகராட்சி நிர்வாகம்? 

;