tamilnadu

img

அநியாய வீட்டு வரி உயர்வை ரத்து செய்வோம்

கோவை, ஏப்.9- சர்வாதிகாரத்தனமாக அதிமுக அரசால் அநியாயமாக நூறு மடங்கு வரை உயர்த்தப்பட்ட வீட்டு வரியை ரத்து செய்ய நிர்பந்தம் அளிப்போம் என கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் உறுதியளித்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளரான பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவர் செவ்வாயன்று கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார். கே.கே.புதூர் பகுதியில் துவங்கிய இந்த பிரச்சார இயக்கம் சாயிபாபா காலனி,கருணாநிதி நகர், பெரியார் நகர்,தயிர்இட்டேரி, ரத்தினபுரி, சம்பத்வீதி, டெக்ஸ்டூல், ரூட்ஸ் பாலம்,காமராஜபுரம், கண்ணப்பநகர், சங்கனூர்சாலை, நல்லாம்பாளையம், மணியகாரன்பாளையம், பகத்சிங்புரம், சிவசக்தி காலணி, கணபதிபுதூர், கணபதி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் பங்கேற்று வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கிற திட்டத்தை வலிய திணித்து வருகிறது. ஒக்கி, கஜா புயல் பதிப்புக்குள்ளாகி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் மக்கள் திரண்டு ஆதரவு கரம் நீட்டியநிலையிலும் மத்திய மோடி அரசு மாற்றந்தாய் மனப்போக்கோடு நடந்து கொண்டது. இதனை எதிர்க்க முடியாத, மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க லாயக்கற்ற அரசாக எடப்பாடி அரசு இயங்குகிறது. தமிழக மக்களின் நலன் குறித்து எவ்வித கவலையும் கொள்ளாமல் ஆட்சியை பாதுகாக்கவேண்டும். ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமே இலக்காக கொண்டு அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.நூறு மடங்கு வரி உயர்வுபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாத எடப்பாடி அரசானது, அம்மாவின் ஆட்சி என்று சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும். கடந்த மூன்று வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால்மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சாதாரண அடிப்படை வசதிகள் கூட செய்துதரப்படவில்லை. அதேநேரம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தைரிமற்ற இந்த அதிமுக அரசு சர்வாதிகரத்தனமாக வீட்டுவரி, சொத்துவரி, தண்ணீர்வரி, குப்பைவரிஎன நூறு மடங்கு வரியை உயர்த்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகள் மாமன்றத்தில் விவாதித்து வரியைநிர்ணயிக்காமல் தான்தோன்றித்தனமாக மக்களின் மீது பெரும் சுமையை ஏற்றியது எடப்பாடி அரசு. 


காசு கொடுத்தால்தான் தண்ணீர்


மேலும், மக்களின் தாகத்திற்கான குடிநீரைகூட அந்நிய நிறுவனமான சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இதனால் பொதுக்குழாய்கள் அகற்றப்படும். தண்ணீர் காசு கொடுத்தால்தான் கிடைக்கும் என்கிற நிலை இந்தஓபிஎஸ், இபிஎஸ், வேலுமணிகளின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்த தொடர் போராட்டத்தில் பங்கேற்றவன் என்கிற முறையில் கோவை மக்களிடம் வாக்கு கேட்கிறேன். புதியஅரசு அமைந்தவுடன் அநியாய சொத்து வரி உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்யவும், அவதிக்குள்ளாகியுள்ள மக்களின் சுமையை குறைக்கவும் உறுதியான நடவடிக்கை எடுப்பேன் என்றும் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதி அளித்தார். முன்னதாக, இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சார இயக்கத்தை திமுக மாநகர் மாவட்ட பொறுப்பு செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் துவக்கி வைத்தார். பிரச்சார இயக்கத்தில் திமுகவின் கோவை லோகு, காங்கிரஸ் கட்சியின் மாநகர் செயலாளர் கணபதி சிவக்குமார், காலனி வெங்கடாசலம், ரூபர்ட், மதிமுக மாநகர் மாவட்டசெயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், சேதுபதி, கிருட்டிணசாமி, ராமநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜீவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஏழுமலை, குயின்ஸ் மனோகரன், கொங்குநாடுமக்கள் கட்சி ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, என்.ஆர்.முருகேசன், ஆர்.செல்வம் மற்றும் முஸ்லிம்லீக், மமக, மஜக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த வாக்கு சேகரிப்பில் நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் இருசக்கரவாகனத்தில் திரண்டு வாக்கு சேகரிப்பு பயணத்தில் ஈடுபட்டனர்.

;