tamilnadu

img

803 சவரன் தங்கம் கொள்ளை வழக்கில் நிதி நிறுவன ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது

கோவை, ஏப். 30-கோவையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 803 பவுன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அந்நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் உள்ளிட்ட இருவரை காவல் துறையினர் செவ்வாயன்று கைது செய்தனர். கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்திற்குள் கடந்த 27-ந் தேதி மாலை புகுந்த முகமூடி அணிந்த நபர் ரூ.2 கோடி மதிப்புள்ள நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரணின் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் பெருமாள் தலைமையிலான 5 தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.சிசிடிவி கேமரா பதிவுகளைஆய்வு செய்து விசாரித்ததில், ஊழியர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. சம்பவத்தின் போது பணியிலிருந்த, நிதிநிறுவன ஊழியர்களான போத்தனூரை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரது மனைவி ரேணுகாதேவி (26), கெம்பட்டி காலனியைசேர்ந்த திவ்யா (24) ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இருவரிடமும் தனித்தனியாக வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கிடைத்தது. குறிப்பாக, ஊழியர் ரேணுகா தேவியின் செல்போனுக்கு அடிக்கடி வந்த சில அழைப்புகள் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், கெம்பட்டி காலனியைச் சேர்ந்த சுரேஷ் (32) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது. ஆனால், முத்தூட் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைக்கும் போது, ரேணுகாதேவியுடன் சுரேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுரேஷின் சதி வலையில் விழுந்த ஊழியர் ரேணுகாதேவி, கொள்ளை சம்பவத்திற்கு துணை போயுள்ளதுவிசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், சுரேஷ் கைது செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணம்மீட்கப்பட்டது. மேலும், முத்தூட்நிதி நிறுவன பெண் ஊழியர் ரேணுகாதேவியும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

;