tamilnadu

img

நூறு நாள் வேலை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

சேலம், மே 13-நூறு நாள் வேலை கேட்டு ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள்  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் போதிய தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும். குறிப்பாக, வேலை வழங்காமல் இருக்க குறைவான வேலை தொகுப்பை உருவாக்கி, தொழிலாளர்களின் வேலை நாட்களின் எண்ணிக்கையை குறைக்க கூடாது. கடந்த 2018- 19 ஆம் ஆண்டில் மேற்கண்ட ஊராட்சிகளில் ஒரு குடும்பத்திற்கு 30 அல்லது 40 நாள்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமப்புறமக்களுக்கு சேர வேண்டிய சம்பளம் முழுமையாக கிடைக்காமல்அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நூறு நாள் வேலை திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் வேலை தொகுப்பை உருவாக்கி சட்டப்படி தொழிலாளர்களுக்கு வேலை 100 நாள்முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்களன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீ.தங்கவேல், மாவட்ட செயலாளர் ஜி.கணபதி, மாவட்ட உதவித் தலைவர் சின்ராஜ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.அரியாகவுண்டர் மற்றும் கோவிந்தன், ஈஸ்வரன், தங்கவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;