tamilnadu

img

விவசாய உற்பத்தி குறைவதற்கு தாராளமய கொள்கையே காரணம்

ஈரோடு, ஏப்.1-நம்பியூர் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு நம்பியூர் பகுதி காங்கிரஸ் நிர்வாகி என்.கே.கே.கருப்புசாமி தலைமை வகித்தார். திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் கே.சுப்பராயன் பணிமனையை திறந்து வைத்தார். சிபிஎம் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ், கொமதேக நிர்வாகி சிவராஜ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சரவணன், திமுகவின் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.பணிமனையை திறந்து வைத்து கே.சுப்பராயன் பேசியதாவது, இந்தியாவின் அணி வேர்களும், பக்க வேர்களும் சிறிது சிறிதாக நசுக்கப்பட்டு வருகிறது. யாரோ ஒருவர் வெற்றி பெறுவதற்கு அல்ல. இந்த நாடு நிலைத்திருக்க வேண்டுமென்றால், நாட்டின் ஒற்றுமை நீடிக்க வேண்டுமானால், இந்தியா காப்பாற்றப்பட வேண்டுமென்றால் மோடி உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மாறுபட்ட கருத்துகளை கொண்ட கட்சிகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் கொள்கை, நோக்கம் தனித்தனியாக உண்டு.  இவ்வாறு பல வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபடுத்துவது என்பது நாட்டின் நலனுக்கே. நாடு என்ற ஒன்று இருந்தால் தானே நாம் போராட முடியும். ஜனநாயக ரீதியாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க, வாக்களிக்க வாதிடவாய்ப்பு ஏற்படும். எனவே, நாட்டை காப்பாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. இந்திய சமுதாய பொருளாதார நிலை பற்றிய ஒரு ஆய்வறிக்கை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு சமர்ப்பிக்கப்படும். இந்தியாவில் 59.1 சதவிகித மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்வதாக குறிப்பிட்டு இருந்தார்கள். 133 கோடி மக்கள் தொகையில் 59 சதவிகித மக்கள் விவசாயம் தான். இப்படி இருக்கும் நமது நாட்டில் தற்போது விவசாயம் என்பது எப்படி உள்ளது.


25 வருடங்களுக்கு முன்னர் 38 சதவிகித உள்நாட்டு மொத்த உற்பத்தியில் பங்களிப்பை செலுத்தியது இந்திய விவசாயம். இன்றைய நிலையில் வெறும் 13 சதவிகிதம் தான் பங்களிப்பை செலுத்துகிறது. மூன்றில் இரண்டு பங்கு விவசாய உள்நாட்டு உற்பத்தி குறைந்துவிட்டது என பொருளாதார அறிக்கையை கூறுகிறது. இந்தியாவில் விவசாயம் செய்கின்ற விளை நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. உலகமயம், தாராளமயம் என்ற இரண்டும் தான் இவற்றிற்கெல்லாம் காரணம்.வெளிநாடுகளிலிருந்து விவசாய விளைபொருள்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு அன்னிய கம்பெனிகளுக்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.  உள்நாட்டு உற்பத்தியை முடக்கிவிட்டு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யலாமா?அவ்வாறு செய்ய அனுமதித்தால் விவசாயம் அழிவை நோக்கி செல்லும். விவசாயம் செய்யவிடவில்லை. நமது இந்திய அரசாங்கம்.இந்தியாவில் விவசாயம் செய்ய முடியவிட்டால், வெண்டைக்காய் வெளி நாட்டில் இருந்து இறக்குமதியாகும். இந்தியாவிற்கு சூழ்ந்திருக்கின்ற மிகப்பெரிய ஆபத்து. இதை கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



;