tamilnadu

ரூ.25 கோடி கடன் தள்ளுபடியால்

அரவை தொடங்கியதால் கரும்பு விவசாயிகள் ஆறுதல்

திருப்பூர், மே 5 –திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடன் தொகை ரூ.25 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இரண்டாண்டு காலம் மூடப்பட்டிருந்த ஆலை இந்த ஆண்டு இயங்கத் தொடங்கியுள்ளது. கரும்பு அரவை தொடங்கி இருக்கும் நிலையில் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு கணியூர், கொமரலிங்கம், நெய்க்காரபட்டி, பழநி மற்றும் ஆலைப்பகுதி ஆகிய ஐந்து கோட்டப்பகுதி விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை ஆறு மாதம் ஆலை அரவைப் பருவமாகும். தினமும் 1,250 டன் அரவை செய்யும் திறன் கொண்ட இயந்திரங்கள் இந்த ஆலையில் உள்ளன. கடும் வறட்சி, கரும்பு சாகுபடி குறைவு மற்றும் கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 2017, 2018 ஆகிய இரு ஆண்டுகள் அமராவதி சர்க்கரை ஆலை இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. கரும்பு அரவைப்பணி நடைபெறவில்லை.இந்நிலையில் இந்த கூட்டுறவு ஆலை கடன் சுமையில் இருந்ததால் விவசாயிகளுக்கும் கரும்புக்கான தொகை தராமல் நிறுத்தி வைக்கப்பட்டது என்றும், இந்த ஆலையின் கடன் தொகை ரூ.25 கோடி இருந்தது என்றும் கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர். அமராவதி சர்க்கரை ஆலையில் இயந்திரங்களை மராமத்து செய்து, இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் ஆலை இயந்திரங்கள் சீர் செய்யப்பட்டு வந்தன. அத்துடன் ஆலையின் கடன் ரூ.25 கோடியை கரும்பு போர்டு ஏற்றுக் கொண்டது. விவசாயிகளுக்கு வங்கி மூலம் பணம் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.இதனால் கரும்பு விவசாயிகள் சாகுபடியைத் தொடங்கி உள்ளனர். சுமார் 13 ஆயிரம் ஏக்கரில் தற்போது கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த எம்.எம்.வீரப்பன் தெரிவித்தார்.மேலும் வரக்கூடிய இரு மாத காலங்களில் இந்த சாகுபடி அளவு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். தற்போது ஆலை நிர்வாகத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் அதிகாரி முனைப்புடன் செயல்பட்டு வருவதால் கரும்பு விவசாயிகள் ஆர்வத்துடன் இந்த ஆண்டு பதிவு செய்து வருகின்றனர். கரும்பு அரவை தாமதமின்றி நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.கடந்த மார்ச் 30ஆம் தேதி முதல் கரும்பு அரவை தொடங்கியது. ஒரு மாத காலத்தில் சுமார் 25 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு அமராவதி சர்க்கரை ஆலை இயங்கத் தொடங்கி இருக்கும் நிலையில் கரும்பு விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர். அரவைக்கு கொடுக்கும் கரும்புக்கும் தாமதமின்றி பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று எம்.எம்.வீரப்பன் தெரிவித்தார்.


;