tamilnadu

img

மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியை அப்புறப்படுத்துங்கள்

ஈரோடு, ஏப்.9-ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு திங்களன்று ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் அ.கணேசமூர்த்தி பேசுகையில்,பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் ஜவுளித் தொழிலுக்கு புகழ்பெற்ற மாவட்டமாகும். மத்திய அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஜவுளித் தொழிலுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜவுளி வியாபாரிகள், நெசவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.


கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி தன்னிச்சையாக அறிவித்தார். ஒரே இரவில் இவர் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் காத்திருந்த பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. இதை தட்டிக்கேட்க வேண்டிய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு எதையும் கேட்காமல் இருக்கிறார்கள். மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் பாஜக கட்சியுடன் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவினர் கூட்டணி வைத்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் நான் உள்ளூரை சேர்ந்த வேட்பாளர். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம். உங்களின் கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றி கொடுப்பேன். மக்களுக்கு விரோதமாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையிலும் இந்த ஆட்சி இருக்கிறது. மக்களுக்கான அரசை உருவாக்க மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலும், மாநிலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். ஆட்சி மாற்றத்தை உருவாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த பிரச்சாரத்தில் திமுக மாவட்ட செயலாளர் சு.முத்துச்சாமி உட்பட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

;