tamilnadu

தருமபுரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி, மே 29-தருமபுரியில் தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம் மே 31 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, தனியார் துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம்” ஒவ்வொரு மாதமும்  வெள்ளியன்று தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.2019 ஆம் ஆண்டு மே மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற மே 31 ஆம் தேதியன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.  எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம்.  இது ஒரு இலவசப்பணியே ஆகும்.  இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.  அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் தேர்வு அனுப்பப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு டிப்ளமோ,  பட்டபடிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் வருகின்ற மே 31 ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு தருமபுரி  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இது தவிரஇதர கல்வித்தகுதிகள் உடையோரும் தகுந்த பணியிடங்களுக்கு பரிசீலிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி  தெரிவித்துள்ளார்.