tamilnadu

img

ஏப்.18ஆம் தேதி வாக்குப்பதிவு வெளிப்படுத்திய புதிய மாற்றத்துக்கான முன் அறிகுறி

கோடையின் வெப்பம் தகித்துக் கொண்டிருக்கிறது. அந்த சூட்டுக்கு சூடு சேர்க்கும் விதமாக கடந்த சில வாரங்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரமும் உச்சகட்ட வெப்பத்தைக் கக்குவதாக இருந்தது. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி மட்டுமின்றி, திருப்பூர் மாநகரத்திலேயே 10 வார்டுகளையும், ஒன்றியத்தில் மூன்று ஊராட்சிகளையும் உள்ளடக்கி கோவை நாடாளுமன்றத் தொகுதியும் இதை ஒட்டியே அமைந்திருக்கிறது.கோவை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜனும், திருப்பூர் தொகுதியில் இந்த கூட்டணியின் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயனும் போட்டியிட்டனர். எதிர்த்தரப்பில் கோவையில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனும், திருப்பூரில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனும் போட்டியிட்டனர். வேறு பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் இந்த இரு அணிகளுக்கு இடையில்தான் போட்டி.


இருவித அணுகுமுறை


தொகுதியில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பதற்காக வேட்பாளர்கள் சென்றபோது, இருவிதமான வரவேற்பு கிடைத்தது. மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் பி.ஆர்.நடராஜனும், கே.சுப்பராயனும் ஏற்கெனவே எம்.பி.க்களாக இருந்தவர்கள். இவர்கள் ஊழல் செய்யாதவர்கள், நேர்மையானவர்கள், எளிமையானவர்கள், யாராக இருந்தாலும் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்து பயனடையலாம் என்று சகல தரப்பினரும் தெரிவித்தனர். அதேசமயம் எதிர்த்தரப்பு வேட்பாளர்களில் சி.பி.ராதாகிருஷ்ணன் மத்திய ஆளும் கட்சியையும், எம்.எஸ்.எம்.ஆனந்தன் மாநில ஆளும் கட்சியையும் சேர்ந்தவர்கள். ஒருவர் முன்பு எம்.பி.யாக இருந்தவர் என்றால் மற்றொருவர் முன்னாள் அமைச்சராக இருந்தவர். இருவரையும் எளிதில் அணுக முடியாது என்பதை தொகுதி மக்கள் பேசிக் கொண்டனர். சொல்லப் போனால் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பிறகு தொகுதி பக்கம் சகஜமாக பார்க்க முடியாதவர், மத்திய அரசில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கயிறு வாரியத் தலைவராக பதவியை வாங்கிக் கொண்டு கேரளா பக்கம் போய்விட்டார் என்று பலதரப்பினரும் தெரிவித்தனர். அதேபோல் ஆனந்தன் முன்னாள் அமைச்சர் என்றாலும் கூட, ஆளும் கட்சியில் மாவட்டச் செயலாளர் என அதிகாரம் படைத்தவராக, சாமானிய மக்களால் அணுக முடியாதவராக வலம் வந்தார் என்றும் அவரது கட்சியினரே கூறும் நிலைதான் இருந்தது.


இருவித வரவேற்புகள்


வேட்பாளர்கள் அணுகுமுறை ஒருபுறம் இருக்க, அவர்கள் முன்வைத்த பிரச்சனைகள் தான் மக்களிடம் இருவித வரவேற்பு கிடைக்கக் காரணமாக இருந்தது. மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் காரணமாகவும், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வு, மதரீதியாக வெறுப்பைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்துவது, மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துவிட்டு பாகிஸ்தான் தாக்குதல், பயங்கரவாதத்திற்கு பதிலடி என பிரச்சனைகளைத் திசை திருப்புவது உள்ளிட்ட அடிப்படையான விசயங்களை மக்களிடம் விளக்கிக் கூறியதுடன், மத்திய அரசின் சர்வாதிகார பாசிசப் போக்கையும், மாநிலத்தை ஆளும் அதிமுக தமிழகம், தமிழர்களின் நலன்களை அடிமைத்தனமாக விட்டுக் கொடுத்து விட்டு தங்கள் குறுகிய நலன்களை, பதவியை மட்டும் பாதுகாத்துக் கொள்ள மிகவும் கீழ்த்தரமாக பணிந்து போனதையும் எடுத்துக் கூறினர்.இடதுசாரி வேட்பாளர்கள் பேசியபோது மக்கள் கடந்த ஐந்தாண்டு கால தங்கள் சொந்த வாழ்க்கை அனுபவங்களில் இருந்து இந்த விசயங்களை நினைவுபடுத்தி ஒப்பிட்டுப் பார்த்து ஆமோதிப்பதை அவர்களது முகக்குறிப்புகள், உடல் மொழி அசைவுகள் நன்றாக வெளிப்படுத்தியது.


அதேசமயம் எதிர்த்தரப்பு வேட்பாளர்களான சி.பி.ராதாகிருஷ்ணனும், எம்.எஸ்.எம்.ஆனந்தனும் மக்களின் வாழ்க்கையோடு எந்த சம்பந்தமும் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். குறிப்பாக தொழில் சார்ந்த நகரமான திருப்பூரில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள், தொழிலாளர் வாழ்வு பாதிக்கப்பட்டதைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவர்கள் பேசவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ நடைபெற்ற தவறு என்று ஒரு ஒப்புக்குக்கூட அவர்கள் அப்பிரச்சனையைத் தொடவில்லை. அதிமுக வேட்பாளர் இப்பிரச்சனைகளை பேசாவிட்டாலும், ஜிஎஸ்டி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார். ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தி பல லட்சக்கணக்கான தொழில் துறையினரை வதைத்த பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இவர் எப்படி இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பார், மாநிலத்தில் இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் இவர்கள்தானே, இதுவரை ஏன் இப்பிரச்சனையில் அவர்களால் தீர்வு காண முடியவில்லை என்ற இயல்பான கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இல்லை.அதிமுக வேட்பாளரை விட அப்பட்டமாக நேர் எதிர் நிலையில் இருந்து பேசினார் சி.பி.ராதாகிருஷ்ணன். கடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் விலைவாசி உயரவே இல்லை, நிலையான நல்லாட்சியை மோடி கொடுத்திருக்கிறார் என்றும், ஜிஎஸ்டி வரிப் பிரச்சனையில் தவறு செய்தவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர், நேர்மையாக தொழில் செய்வோருக்கு இதனால் பாதிப்பே இல்லை என்றும் வெளிப்படையாக பேசினார்.


அவர் இப்படிப் பேசுவதற்கு ஒன்று, இங்குள்ள பாதிப்பு நிலை தெரியவில்லை என்று சொல்ல வேண்டும், அல்லது நிலைமை தெரிந்திருந்தாலும், அப்பட்டமாக பொய்யை திரும்பத் திரும்பப் பேசினால், உண்மை என மக்கள் நம்பி விடுவார்கள் என்ற இறுமாப்பாக இருக்க வேண்டும். அவருக்கு உண்மை நிலை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை, பாஜகவைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் இறுமாப்பு கொண்டு மக்களை திசை திருப்புவதுதான் அக்கட்சியின் இயல்பான குணம் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.எனவேதான் இடதுசாரி வேட்பாளர்கள் நடராஜனும், சுப்பராயனும் அவரவர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் வலம் வந்து நகரம், கிராமம் என வீதி, வீதியாக மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்டபோது எந்த எதிர்ப்போ, முற்றுகையோ நடைபெறவில்லை. அன்பான உபசரிப்பும், வரவேற்பும், உரிமையோடு தங்கள் கோரிக்கைகளையும் முன்வைத்து நீங்கள் வெற்றி பெற்று செய்து கொடுங்கள் என்ற கோரிக்கையும் வந்தது.அதேசமயம் ஆளும் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தும் சி.பி.ராதாகிருஷ்ணனும், ஆனந்தனும் வாக்குக் கேட்ட சென்ற இடங்களில் மக்களுக்குச் சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளை பேசியதால் ஆங்காங்கே எதிர்ப்புகளையும், முற்றுகையையும் சந்திக்க நேரிட்டது. அப்போதும் கூட அவர்கள் மக்களுக்கு பொறுப்புடன் பதில் சொல்லவில்லை. நாங்கள் பதில் சொல்லி விட்டோம் என்று அதிகாரத் தொனியில் கூறிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டனர். சி.பி.ராதாகிருஷ்ணன் ஒருபடி மேலே போய் நீங்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் பரவாயில்லை என்று மக்களிடம் முகத்துக்கு நேராக கோபமாகக் கூறிவிட்டு கடந்து சென்ற சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதுதான் இருவேறு அணுகுமுறைகளும், இருவேறு வரவேற்பும் கிடைத்த அனுபவம் ஆகும்.


தலைவர்கள் எவ்வழி?


நாடாளுமன்ற தேர்தல் என்பது, அடிப்படையில் இந்த நாட்டின், மக்களின் ஜீவாதாரமான பிரச்சனைகளை, அது சார்ந்த அரசியல் கருத்துகளை விமர்சனங்களாக மக்களிடம் முன் வைத்து, அவர்களின் ஜனநாயகப் பங்கேற்பை ஊக்கப்படுத்தி அரசியல் அமைப்பைச் செழுமைப்படுத்தும் வலிமையான அரசியல் செயல்பாடு ஆகும்.மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் து.ராஜா மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்தியாவும், தமிழகமும் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அடிப்படையான பிரச்சனைகள், ஜனநாயகத்திற்கு நேரிட்டிருக்கும் ஆபத்துகள், மத்திய ஆட்சியாளர்களின் படுமோசமான சீர்குலைவுகளை மக்களிடம் வெளிப்படுத்தினர். தமிழக ஆட்சியாளர்களின் சுயமரியாதை இழந்த அடிமைத்தனத்திற்கு தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்றனர். 


அதேசமயம் எதிர்தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா மற்றும் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தற்போது மத்திய ஆட்சியின் சாதனைகள் பற்றி மறந்தும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் பிரதமர் மோடி என்ற பெயரை உச்சரிக்கவே தயங்கினர். மூன்று வார காலத்தில் ஆளும் கட்சி தரப்பில் வந்த பிரபலங்களில் மோடியின் பெயரை ஓரிரு முறை மட்டுமே உச்சரித்தவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான். மற்றவர்கள் மோடியின் பெயரைச் சொல்லவே அச்சப்பட்டனர். அதே சமயம் மாநில அரசு செய்த சாதனைகள் என்றும் அவர்களால் எந்த விபரத்தையும் பட்டியல் போட முடியவில்லை. அதைவிட குறிப்பாக இந்த பகுதி பனியன், விசைத்தறி, விவசாயம் உள்ளிட்ட அடிப்படை தொழில்களின் பிரச்சனைகள், தற்போது சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது குறித்தோ, குறைந்தபட்சம் மக்கள், விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றோ வாய் திறக்கவில்லை. முரண்பாடு இல்லாமல் பேசுவதற்கு, சொல்வதற்கு உரிய விசயங்கள் அவர்களிடம் இல்லாதபோது, தரம் தாழ்ந்த முறையில் மிகவும் அற்பத்தனமான குற்றச்சாட்டுகளை சொல்லி, 1000 ரூபாய் கொடுத்தோம், 2000 ரூபாய் கொடுப்போம் என ஆசை வார்த்தைகளைத் தாராளமாக அள்ளிவீசினர்.


புதிய வரலாற்றுக்கான திறப்பு


ஒரு மிகப்பெரிய அரசியல் போராட்டம் நடைபெற்று இப்போது இறுதித்தீர்ப்பு நாளுக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. மே 23ஆம் தேதி வெளிவரப் போகும் தீர்ப்பு புதிய வரலாற்றை எழுதுவதாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆனால் வாக்காளர்களான பொது மக்களின் அன்றாட பிரச்சனைகளான வேலைவாய்ப்பு, குடிநீர், சாக்கடை, குண்டும், குழியும் இல்லாத சாலை, தெரு விளக்கு, மருத்துவ வசதி, குழந்தைகளின் கல்வி போன்ற பிரச்சனைகள் எப்போதும் போல் தீர்வுக்காக ஏங்கி நிற்கின்றன. இடதுசாரி எம்.பி.க்களாக பி.ஆர்.நடராஜனும், கே.சுப்பராயனும் நாடாளுமன்றத்துக்குள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்போது, சாமானியர்களின் அடிப்படையான பிரச்சனைகளை மையப்படுத்திய மக்கள் அரசியல் நாடாளுமன்றத்திலும், திருப்பூர் உள்ளிட்ட இந்த வட்டாரத்தின் வீதிகளிலும் முக்கியத்துவம் பெறும். அது புதிய வரலாற்று மாற்றத்துக்கான திறவுகோலாக இருக்கும் என்பது உறுதி. 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றபோது தொகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளைச் சுற்றி வந்தபோது அதற்கான தெளிவான முன் அறிகுறிகள் தென்பட்டன.


- வே.தூயவன்







;