tamilnadu

img

பாலியல் கொடூரத்தை கண்டித்து பொள்ளாச்சியில் முழு அடைப்பு

பொள்ளாச்சி பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று பொள்ளாச்சி நகரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வணிகர்கள் இந்த முழு அடைப்பிற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, அந்த கொடூர சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்தது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்த போலீசார், தடவியல் துறையிடம் ஆய்விற்காக ஒப்படைத்துள்ளனர். குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து குற்றவாளிகள் பயன்படுத்திய பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்கள், பாலியல் கொடூர வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதி கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தெரிவித்துள்ளன.

;