tamilnadu

img

மணல் கடத்திய ஆளுங் கட்சி பிரமுகர் லாரி பறிமுதல்

அவிநாசி,ஏப்.30- அவிநாசி ஒன்றியத்தில் மண் கடத்திய வாகனத்தை திருப்பூர் கனிம வளத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வாகனம் ஆளும் கட்சிபிரமுகருக்கு சொந்தமானது என்பதால் வழக்குப்பதிவு செய்ய தயக்கம் காட்டுவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.அவிநாசி ஒன்றியத்தில் 31 கிராமபஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பஞ்சாயத்துகளில் உள்ள குளம், குட்டைகளில் மணல் கடத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் இரவு நேரங்களில் நடைபெறுகின்றன. இதில் கடந்த மாதத்தில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளன. ஆளும் கட்சியின் பிரமுகரின் வாகனமும் இதில் அடக்கம். இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு திருப்பூர் கனிம வளத்துறையினர் நம்பியான்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகருக்கு சொந்தமான (ஏகேஜி லாரி) வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து வட்டாட்சியர் வாணி லெட்சுமி ஜெகதாம்பாளிடம் கேட்டபோது, திருப்பூர் கனிம வள துறையினர் மூலம் பிடிக்கப்பட்ட வாகனத்தை பற்றி எந்த விபரமும் தெரியாது என மழுப்பலான பதில்கூறினார். மேலும் கனிம வளத்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது முறையான பதில் அளிக்காமல் மழுப்பினர். இதனால் பிடிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் மீது எவ்விதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும் கட்சி பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

;