tamilnadu

img

மூடப்படாத குழிகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

உதகை, செப்.20- உதகையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப் பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். உதகையில் உள்ள ஸ்டேட் பேங்க் லைனில் பல  மாதங்களுக்கு முன்பு மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. அப்போது தோண்டப் பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் வாகன ஓட்டிகள்  மற்றும் அவ்வழியே செல்லும் பொது மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும்,  இதே சாலையில் சுமார் 100 அடி தூரத்தில் ஐந்தடி  ஆழமுள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்த நிலையில் திறந்தே கிடக்கிறது. இதனால் பெரும்  விபரீதம் ஏற்படும் அபாய நிலையும் காணப்படு கிறது. முன்னதாக, ஜேசிபி எந்திரத்தின் மூலம் குழிகள் தோண்டப்பட்டபோது பாதாள சாக்கடையின் குழாய்  முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதேபோல் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் குடிநீர் வீணாகி வருவதோடு, பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இப்பகுதியில் தேங்கி  வழிந்து ஓடுவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு  ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி யாக சீர் செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.