tamilnadu

img

புது இயந்திரத்திற்கும், பழைய இரும்புக்கு ஒரே வரியா?

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவையில் ஜவுளி தொழிலுக்கு தேவையான புதிய இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பல உள்ளன. அதேசமயம் பயன்படுத்தப்பட்ட ஜவுளிஇயந்திரங்களும் இங்கு விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கொல்கத்தா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் மிகப்பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட ஜவுளி இயந்திரங்கள், அங்கிருந்து வாங்கி கோவைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இப்பணியில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் அப்படியே பயன்படுத்தப்படுவதில்லை. அவை பிரிக்கப்பட்டு உதிரி பாகங்களாகவும் விற்கப்படுகின்றன. மற்றவை உடைக்கப்படுகின்றன. இவ்வாறு வாங்கப்படும் பழைய இயந்திரங்களுக்கு முன்பு 5 சதவிகித வரி விதிக்கப்பட்டு வந்தது. இநிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசால் தற்போது ஜிஎஸ்டி என்ற பெயரில்18 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தென்னிந்திய ஜவுளி இயந்திர விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஷாஜஹான் கூறியதாவது, 5 சதவிகிதமாக இருந்த வரி, இந்த ஆட்சியில் 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டால் சுமார் ரூ.12 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. இவை விற்பதற்கு எவ்வளவு நாளாகும் எனதெரியாது. மேலும், பயன்படுத்தப்பட்ட பொருள்களுக்கு புக் வேல்யூ என்பது கிடையாது. எனவே, வங்கியில் கடன் பெற முடியாது. இதனால் வெளியில் கடன் பெற வேண்டிய நிலையே உள்ளது. இதன்காரணமாக மாதம் ஒன்றிற்கு ரூ.12 லட்சத்திற்கான வட்டி செலுத்த வேண்டும்.இந்நிலையில் அப்பொருட்கள் விற்கும் வரை கடன் பட்டு, வட்டி கட்டிக் கொண்டு காத்திருக்க வேண்டும். வாங்கிய பொருட்கள் விற்கப்படும்போது முதலீட்டுக்கான வட்டி மற்றும் ஜிஎஸ்டியையும் செலுத்தி விலை நிர்ணயிக்கும்போது விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, விதிக்கப்பட்ட வரியை மறு பரிசீலனை செய்ய வேண்டும். 5 சதவிகிதத்திற்கும் கீழே வரிவிகிதத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


சந்திப்பு: சக்திவேல்

;