தருமபுரி, ஆக.18- சமூக நீதிக்காக பாடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறு வோருக்கு ரூ.1லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் 2019 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக் கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விரு தாளரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதில் பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு அடையவும், வாழ்க்கைத்தரம் உயர கடந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பெயர், பிறந்த இடம்,தாய், தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி (தொலைபேசி எண்), கல்வி தகுதி, இனம் மற்றும் சாதி, தொழில், சமூக நீதிக்காக பாடு பட்ட விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும். இதில் பெரியார் கொள்கையில் ஈடுபாடு, சமூக சீர்திருத்தக் கொள்கை குறித்து சிறுகுறிப்பு, கலை, இலக்கியம், சமூக பணி ஆகியவை குறித்து சிறு குறிப்பு போன்ற விவரங்களுடன் அக்டோபர் 10ந் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.