கோவை, மே 28 - தூய்மை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு குறித்த அரசா ணையை உடனடியாக நடைமுறைப்படுத்தக்கோரி சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் வியாழனன்று அனைத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சட்ட மன்றத்தில் ஓ.எச்.டி ஆபரேட்டர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500ல் இருந்து ரூ. 4 ஆயிரம் மற்றும் தூய்மைக் காவலர் களுக்கு ரூ. 2 ஆயிரத்து 600ல் இருந்து ரூ. 3 ஆயிரமாக ஊதிய உயர்வு என அறிவித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இதனை உடனடியாக வழங்குவதோடு தொகுப்பூதியப் பணியாளர்ளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும் அனைத்து பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உப கரணங்கள் அளித்திட வேண்டும், இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார், என்.பாலமூர்த்தி, பன்னீர் செல்வம், ஆர். கோபால், எம். ஆறுமுகம், ரவிச்சந்திரன், தி. ரவி, எஸ்.ஜி. சண்முகம், க. அய்யாசாமி, க.பாபு மற்றும் ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி களை சந்தித்து அளித்தனர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.