கோவை, டிச. 23- அரசியலமைப்பைப் பாதுகாத்தால், அது நம்மைப் பாதுகாக்கும் என்று உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூரில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, மத்திய மின்னணு, தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், தேசிய இணைய பாது காப்பு, பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய இந்திய சைபர் மாநாடு கல்லூரி வளாகத்தில் சனி யன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர் வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜே.ஜேனட் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாநாட்டைத் தொடங்கி வைத்த உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பேசுகையில், இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பான குற்றங்களும், அச்சுறுத்தல்களும் அதிக ரித்து வருகின்றன. இந்திய அரசியலமைப்பு குறித்தும், இணையவெளி (சைபர் ஸ்பேஸ்), இணைய குற்றம் (சைபர் கிரைம்) ஆகிய வற்றில் நமது பங்களிப்பு குறித்து பேசும் போது, ஒரு கேள்வி எழுகிறது. நாடாளு மன்றம், சட்டத்தை செயல்படுத்தும் அமைப் புகள், நீதிமன்றங்கள் இவை மூன்றில் எது இறையாண்மை மிக்கது என்று என்பதே அது. சில நேரங்களில் நாடாளுமன்றம்தான் என்ற கூற்று எழுந்துள்ளது. ஆனால், அர சியலமைப்புச் சட்டமே நமது இறை யாண்மை என்பதை உச்ச நீதிமன்றம் பல நேரங்களில் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தை நாம் பாதுகாத்தால் அது நம்மைப் பாது காக்கும். அரசியலமைப்பின் மாண்பையும், நற்பெயரையும் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51(ஏ) தெரிவிக்கும் அடிப்படை கடமைகளை நாளைய தலைவர்களான மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இணைய வெளி யில் தனது இடத்தை இந்தியா உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு பயனுள்ள ஆயுதம். அது எத்தனையோ ஆச்சரியமான வேலைகளை செய்து வரு கிறது. இருப்பினும் அது நமக்கு எஜமானன் ஆகிவிடாமல், நமக்கு எப்போதும் அடிமை யாக இருக்கும்படியே வைத்திருக்க வேண் டும். இயந்திர மனிதர்களால் நம்மால் செய்ய முடியாத பல்வேறு பணிகளைச் செய்ய முடியும் என்றாலும் நமது மூளையைப் போன்று வேகமாக சிந்தித்தோ, சமயோசி தமாகவோ செயல்பட முடியாது. இணைய வெளி, தொழில்நுட்பப் பயன் பாடுகள் குறித்து பேசும் அதே நேரத்தில், அதனால் ஏற்படும் விளைவுகள், அவற் றைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங் களையும் கருத்தில் கொள்ள வேண்டும். இணைய குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா 23ஆவது இடத்திலேயே இருப்பதாகக் கூறியுள்ள னர். எனவே இதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குற்றங்களைக் குறைக் கவும், தடுக்கவும் உள்ள அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். அதேபோல், இணையவெளி என்பது புவியியல் நில அமைப்பைப் போன்று இல்லை என்பதால், இந்தத் துறையில் உள்ள பிற நாடுகளுடன் இணைந்து செயல் பட வேண்டிய அவசியமும் உள்ளது. இணை யவெளி, இணைய குற்றங்கள், அதனால் ஏற்படும் சமூக தாக்கங்கள் போன்றவை குறித்து தகுந்த தொழில்நுட்ப வல்லுநர் களைக் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாடங்களாக கற்பிக்கப் பட வேண்டும். இவ்வாறு நீதியரசர் பேசி னார். இந்நிகழ்ச்சியில் தமிழக குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு காவல் துறை கூடுதல் இயக்குநர் எம்.ரவி பேசும்போது, தமிழ்நாட்டிலேயே கோவை யும், சென்னையும்தான் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக உள்ளன. தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் இணைய குற்றத் தடுப்பு காவல் நிலையங் கள் தொடங்கப்பட உள்ளன. எதிர்காலத் தில் இதற்கான தனி நீதிமன்றங்களும் உரு வாகும் வாய்ப்பு உள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதியும், அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் தலைவருமான கே.என்.பாஷா சிறப்புரையாற்றினார். தேசிய இணைய பாதுகாப்பு, பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பின் கூடுதல் இயக்குநர் காளிராஜ், கல்லூரியின் தேர்வுக் கட்டுப் பாட்டு அதிகாரி ஜே.பி.ஆனந்த், பேராசிரி யர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.