நான் வேண்டும் வேண்டுதல்கள் -என்
இறப்பில் தான் கிட்டும் என்றால்
நாளைக்கேன்? இன்றைக்கே - என்
உயிர் கொய்கஉம் கைகள் .
(நான்)
இதயங்கள் ஏன் வெடிக்க?
இளமொட்டு மட்டுமே வெடித்திடுக !
விழிகள் ஏன் நீர் சொரிய?
விண் மேகம் மட்டுமே நீர் சொரிகl.
இடிதொட்டும் பணியாதபூ மரம்
இளந்தென்றல் தொடுகைக்கே நடம் இடும்!
அது போல மானிடம்
அகந்தைக்கு வளையாமல்
அன்புக்கு வளைந்தாலே ஓர் தினம்
அன்று நான் சாவுக்கு சமர்ப்பணம்.
(நான்)
குட்டுகிற முஷ்டிகள் ஏன்?
பௌர்ணமி யாம்பறையைப் போய் கொட்டுகவே .
வெட்டுகிற கொடுமைகள் ஏன்?
விண்ணகத்தை மின்னல் மட்டும் வெட்டுகவே!
பொன் அல்ல நெல் மணியே ஒளிர்ந்திட,
பூ அல்லநெஞ்சகமே மணந்திட,
விண் அல்ல மானிடரே
மேன்மேலும் உயர்ந்திட
விதிஒன்று புதிதாக வரும் தினம்
வேகட்டும் நிம்மதியாய் என் பிணம்.
(நான்)
என்னுடைய சவமாலை
மனிதருக்கோர்தேன் சொட்டு சொரியுமெனில்
எனது சவமாலையின் பின்
தான் மனிதம் ஜெயமாலை அணியுமெனில்
இப்போதே செத்துவிட ஆசையே!
இனிதெனக்கென் சவமேள ஓசையே !
மானிடத்தின் மூச்சுக்கென்
மரணத்தின் முன் மூச்சு
காணிக்கை ஆகிவிடும் என்றால்
களிப்படைவேன் எனை இன்றே கொன்றால்!
(நான்)