tamilnadu

வாக்காளர் அட்டை மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இலவச வீட்டு மனை பட்டா வழங்குக வாக்காளர் அட்டையை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்


ஈரோடு, ஏப்.1-ஈரோட்டில், இலவச வீட்டு மனை பட்டா வழக்காததை கண்டித்து திங்களன்று பொது மக்கள் வாக்காளர் அட்டையை ஒப்படைக்க வந்ததால் மாவட்ட ஆட்சியரகம் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர், தொட்டையம்பாளையம், வாய் காடு பாறை பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்திருந்தனர். இச்சமயத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணி ஈடுபட்டிருந்த காவல்துறையினர், கூட்டமாக ஒரே நேரத்தில் அனைவரும் ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றனர். இதனையடுத்து ஐந்து பேராக உள்ளே செல்லுமாறு கூறினர் இதனை ஏற்று மக்கள் குழுக்களாக பிரிந்து சென்றனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆர். என். புதூர், சொட்டையம்பாளையம் வாய்காடு பாறை பகுதியில் கடந்த 40 வருடங்களாக 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள். சொந்தமாக வீடு எதுவும் கிடையாது. இதனால் இலவச வீட்டு மனை கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால் இதுவரைக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. இது குறித்து ஏற்கனவே பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர்.மேலும் குடிநீர், மின் இணைப்பு வசதியும் இல்லை. எனவே எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க வந்து உள்ளதாக தெரிவித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




ஈரோடு மாவட்டத்தில் கூடுதலாக  1,188 வாக்குப்பதிவு இயந்திரங்கள்


ஈரோடு, ஏப்.1-ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் தலைமையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பகிர்ந்தளிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி மார்ச் 21ந் தேதியன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்கள் குறித்து ஆலோசனைக்கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் சுழற்சி முறை யில் ஒதுக்கீடு செய்து மார்ச் 23ஆம் தேதி அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (ஏப்.1) ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் 2-ம் கட்டமாக கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 237 வாக்குப்பதிவு மையங்களுக்கு கூடுதலாக 362 வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு 298 வாக்குப்பதிவு மையங்களுக்கு கூடுதலாக 427 வாக்குப்பதிவு இயந்திரங்களும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு 275 வாக்குப்பதிவு மையங்களுக்கு கூடுதலாக 399 வாக்குப்பதிவு இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 1,210 வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு 1,513 வாக்குப்பதிவு இயந்திரங்களும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு 1,400 வாக்குப்பதிவு இயந்திரங்களும், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு 263 வாக்குப்பதிவு மையங்களுக்கு 959 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பவானி சட்டமன்ற தொகுதிக்கு 289 வாக்குப்பதிவு மையங்களுக்கு 1,053 வாக்குப்பதிவு இயந்திரங்கள், அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு 261 வாக்குப்பதிவு மையங்களுக்கு 952 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு 296 வாக்குப்பதிவு மையங்களுக்கு 1,080 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு 294 வாக்குப்பதிவு மையங்களுக்கு 1,071 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என 2,213 வாக்குப்பதிவு மையங்களுக்கு 9,238 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தினேஷ் (பொது), ஈஸ்வரன் (கணக்குகள்), வட்டாட்சியர் (தேர்தல்) ரவிச்சந்திரன் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;