tamilnadu

img

ஊரக உள்ளாட்சி தேர்தல் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் சிபிஎம் வேட்பாளர்கள்

கோவை, டிச. 28 –  கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு முதற்கட்ட தேர்தல் 27ஆம்தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாவது கட்ட தேர்தல் 30  ஆம்தேதி நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில்  பொள்ளாச்சி, மதுக்கரை ஆகிய பகுதிகளில் முதற்கட்ட தேர்தல் முடிவுற்று, இரண்டாவது கட்டமாக பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், மேட்டுபாளையம், காரமடை, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தலை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக, சிபிஐ, விசிக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சூலூரில் மாவட்ட கவுன்சிலராக 8 ஆவது வார்டில் எம்.ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலராக 6 ஆவது வார்டில் தேவராஜ், சூலூர் ஒன்றிய 5 ஆவது வார்டு ஜோதிபாசு, 10 ஆவது வார்டு எம்.கோபி, நீலாம்பூர் ஊராட்சி 9 வார்டு உறுப்பினர் பாலகிருஷ்ணன், 3 ஆவது வார்டில் நாகர்ஜூன், தடாகம் ஊராட்சி ஒன்றிய 10 ஆவது வார்டில் உறுப்பினராக புவனேஸ்வரி கேசவமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதேபோல், குருடம்பாளையம் ஊராட்சி 7 ஆவது வார்டு எம்.கோகுலகிருஷ்ணன், குருடம்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் 15 ஆவது வார்டு ப.வெ.மலர்செல்வி, அன்னூர் ஒன்றிய 14 ஆவது வார்டு கவுன்சில் வேட்பாளர் மகேந்திரன் (எ) கனகராஜ், ம.க.செட்டிபாளையம் 8 ஆவது வார்டு கிருத்திகா மற்றும் மேட்டுபாளையம், காரமடை, கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா உள்ளிட்டோர் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும், கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு ஒன்றிய, நகர, தாலுகா குழுக்களின் செயலாளர்கள், உறுப்பினர்கள் குழுக்களை அமைத்து தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

;