உதகை, மார்ச் 3- உதகை ரயில் நிலைய நுழைவாயிலின் எதிரே பேருந்து நிழற்குடை அமைத்துத் தர வேண்டுமென பள்ளி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை ரயில்நிலைய நுழைவாயில் எதிரே காந்தள் பகுதிக்கு செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பேருந்துக் காக காத்திருப்பது வழக்கம். இந்நிலையில் இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாத காரணத் தால் வெயில் மற்றும் மழைகாலங்களில் அதிக சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் போர்கால அடிப்படையில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.