tamilnadu

img

இந்நாள் மே 08 இதற்கு முன்னால்

1886 - கோக்க-கோலா முதன்முறையாக விற்பனை செய்யப்பட்டது. போதைப் பழக்கம், நரம்பு நோய்கள் உள்ளிட்ட பலவற்றை குணப்படுத்தும் மருந்து என்ற விளம்பரத்துடன் இதனை ஜான் பெம்பர்ட்டன் தன் மருந்துக்கடையில் விற்பனை செய்தார். அமெரிக்க உள்நாட்டுப் போரில், கூட்டணிப்படையின் ராணுவ அலுவலராக இருந்து, போரில் காயமுற்ற பெம்பர்ட்டன், வலிநிவாரணியாகப் பயன்படும் மார்ஃபீன் என்னும் போதைமருந்துக்கு அடிமையாகிவிட்டார். இதற்கு மாற்று தேடிய அவர், ப்ரான்சின் கோர்சிகா தீவில் கிடைக்கும் கோக்கா ஒயினைப் பயன்படுத்தத் தொடங்கினார். பின்னர் அதில் காஃபீன் நிறைந்த ஆப்பிரிக்கக் கோலா மரத்து விதைகளைச் சேர்த்து, ‘பெம்பர்ட்டனின் பிரெஞ்ச் ஒயின் கோக்கா’ என்ற பெயரில், நரம்புக்கான சத்து மருந்தாகத் தன் மருந்துக்கடையில் விற்பனை செய்தார். அட்லாண்டாவில், அவர் வசித்த பகுதியில் 1886இல் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், ஒயின் கோக்காவின் மதுத்தன்மை நீக்கப்பட்ட கோக்க-கோலாவை உருவாக்கினார். சோடா உடலுக்கு நல்லது என்று நம்பப்பட்டதால், அக்கால மருந்துக்கடைகளில் பிரபலமாக இருந்த சோடா பவுண்ட்டன் எந்திரங்கள்மூலம், கோக்க-கோலா மருந்தாக விற்பனை செய்யப்பட்டது. கோக்க-கோலாவை உற்பத்தி செய்ய மேலும் இருவருக்கு அனுமதியளித்தாலும், கோக்க-கோலா என்ற பெயர் தன் மகன் சார்லிக்குத்தான் சொந்தம் என்று பெம்பர்ட்டன் கூறிவிட்டார். உற்பத்தி உரிமையை விலைக்கு வாங்கியவர்களில் ஒருவரான ஆசா கேண்ட்லர், ‘வாக்கர், கேண்ட்லர் அண்ட் கோ’ என்ற நிறுவனத்தைத்தொடங்கி, ‘யும்-யும்’, ‘கோக்’ என்ற பெயர்களில் விற்பனை செய்தாலும், அது வெற்றியடையவில்லை. பெம்பர்ட்டன் 1888இல் திடீரென்று இறந்துவிட, போதைக்கு அடிமையான சார்லியிடமிருந்து 300 டாலருக்கு கோக்க-கோலா பெயரை கேண்ட்லர் வாங்கி, 1892இல் (தற்போதைய - இரண்டாவது) கோக்கா-கோலா நிறுவனத்தைத் தொடங்கினார். பெம்பர்ட்டனின் இறுதி ஊர்வலத்திலேயே, அவர் மனைவியிடம் 300 டாலர் கொடுத்து, கோக்க-கோலா பெயரை கேண்டலர் வாங்கியதாகவும் ஒரு தகவல் உள்ளது. 1885இலிருந்தே ஸ்பெயினில் விற்பனையாகிவந்த கோலா-கோக்கா என்ற பானத்தின் உரிமையையும் 1953இல் கோக்க-கோலா நிறுவனம் வாங்கிக்கொண்டது.அறிவுக்கடல்

;