tamilnadu

img

யுஏபிஏ சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது

திருவனந்தபுரம்:
சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் (யுஏபிஏ) சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் தெரிவித்தார். கோழிக்கோட்டில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அலைன்,தாஹா என்கிற 2 மாணவர்கள் சட்டத்திற்குப்புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்(யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்டனர். இது குறித்து திங்களன்று கேரள சட்டமன்றத்தில் யுடிஎப் உறுப்பினர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் அவசர தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு பதிலளித்து முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது:கைது செய்யப்பட்ட அலன் மற்றும் தாஹாவின் வீடுகளிலிருந்து மாவோயிஸ்ட் துண்டு பிரசுரங்களும், புத்தகங்களும் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாஹா மாவோயிஸ்ட் ஆதரவுமுழக்கமிட்டதாகவும் காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யுஏபிஏ சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.கோபிநாதன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

யுஏபிஏ சட்டமும் காங்கிரசும்
முந்தைய ஆட்சி காலத்தில் போடப்பட்ட 6 யுஏபிஏ வழக்குகளை இந்த அரசு ரத்து செய்தது. 2008இல் யுஏபிஏ சட்டம் நாடாளு மன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்தது இடதுசாரி எம்பிக்கள் மட்டுமே. மீண்டும் இதில் திருத்தம் கொண்டுவந்தது அமித்ஷா உள்துறை அமைச்சர் ஆன பிறகு.இப்போதும் இந்த திருத்தத்தை முடிந்த மட்டும் எதிர்த்து குரல் கொடுத்தது கேரளத்திலிருந்து சென்ற ஒரு உறுப்பினர் உள்ளிட்ட இடதுசாரிகள் மட்டுமே. அதற்காக தேசவிரோதி என்கிற பழிச் சொல்லுக்கும் உள்ளானார்கள். கேரளத்திலிருந்து சென்ற 15 காங்கிரஸ் உறுப் பினர்களில் ஒருவர் கூட இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.கடந்த ஆட்சி காலத்தில் சிபிஎம் ஊழி யர்கள், தலைவர்களை யுஏபிஏ சட்டத்தின் பெயரால் வேட்டையாடினர். ஏற்கனவே தடாசட்டத்தை பயன்படுத்தி அரசியல் கட்சி தலைவர்களை வேட்டையாடியது போலவே இந்த சட்டத்தை பயன்படுத்தி இடதுசாரி தலைவர்களை வேட்டையாடினர். உள்துறை அமைச்சராக திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் இருந்த போது 25.3.2013இல் சட்டமன்றத்தில் எழுப்பியஒரு கேள்விக்கு பதிலளித்தவர் யுஏபிஏசட்டத்தின்கீழ் 87 பேர் கைது செய்யப்பட்ட தாக கூறினார். அதில் இடதுசாரி தீவிர வாதம் தொடர்பாக 13 பேரும், மத அடிப்படைவாதம் தொடர்பாக 74 பேரும் உள்ளதாக தெரிவித்தார். 8.2.2016 இல் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அன்றைய அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா யுபிஏபி சட்டத்தில் 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த காலத்தில் இந்த சட்டம் எவ்வாறெல்லாம் தவறாக பயன்படுத்தப்பட்டது என்பதை கேரளம் அறிந்ததே.

சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக 1950இல் தடுப்பு காவல் சட்டத்துக்கு எதிரான சட்டப் போராட்டம் நடத்தியவர் தோழர் ஏ.கே.கோபாலன். அந்த சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் நடந்த ஏ.கே.ஜி vs ஸ்டேட் ஆப் மெட்றாஸ் என்கிற அந்த வழக்கு பிரபலமானது. மிசா என்கிற கறுப்பு சட்டத்தால் ஆட்கொணர்வு மனு கூட தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. யுஏபிஏ இல்லாத காலத்தில் என்னவெல்லாம் நடந்துள்ளது என்பதற்காகவே இதை கூற வேண்டியதாயிற்று. இப்போதாவது யுஏபிஏ சட்டம் உட்பட கறுப்பு சட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும்.

மாவோயிஸ்ட் ஆதரவு ஏன்?
யுஏபிஏ சட்டத்தை கொண்டுவந்ததும், அதை பாஜக மேலும் கடுமையாக்கியபோது அதை ஆதரித்ததும் காங்கிரஸ் கட்சி. இந்தவிவரங்கள் யாருக்கும் தெரியாது என்கிற எண்ணத்தில் குடிமக்களின் உரிமை காப்பதாக வேடம் போட வேண்டாம். ஜனநாயகஉரிமைகளை காப்பவர்கள் என்கிற முகமூடி அணிய வேண்டாம். மாவோயிஸ்ட்டுகளை கேரள காங்கிரஸ் ஆதரிப்பது அதிர்ச்சிஅளிப்பதாகும். 2013-14 களில் மேற்குவங்கத்தில் சுமார் 120 இடதுசாரி ஊழியர்களை கொடூரமாக படுகொலை செய்தது இதே மாவோயிஸ்ட்டுகள்தான். அவர்களை ஏதுமறியாத ஆட்டுக்குட்டிகளாக சித்தரிக்க வேண்டாம். மனித உரிமை, குடிமக்கள் உரிமைகள் குறித்தெல்லாம் பேசுகிறவர்கள் மாவோயிஸ்ட்டு களை பரிசுத்தவான்களாக்க முயற்சிப்பது
ஏன்? சரணடைவதற்கு ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அதற்கான எந்த முயற்சியும் அவர்கள் தரப்பில் நடக்கவில்லை. தேவையான ஆயுதங்களுடன் வந்து காவல்துறை யினரை கண்டதும் சுட்டவர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஏன் மேற்கொள் கிறார்கள் என்பது புரியவில்லை.

சத்தீஷ்கரின் பஸ்தாரில் 2010இல் 75 சிஆர்பிஎப் வீரர்களை ஒரே நேரத்தில் மாவோ யிஸ்ட்டுகள் கொன்றனர். 2017 ஏப்ரலில் 25 சிஆர்பிஎப் வீரர்களை கொன்றதும் இதே பரிசுத்தவான்கள்தான். 2018இல் மகாரா ஷ்ட்டிரா, சத்தீஷ்கர், பீகார் மாநிலங்களில் பலர் கொல்லப்பட்டனர். அத்தகைய ஒரு சந்தர்ப்பம் கேரளத்தில் இப்போதாவது ஏற்படட்டும்என கருதுகிறீர்களா? அவர்கள் சரணடைவதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப் பட்டுள்ளன. இது தொடர்பான நீதிபதி விசாரணை நடப்பதால் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்குள் செல்லவில்லை.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.முதல்வரின் விளக்கத்தைத் தொடர்ந்து அவசர தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு அவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் அனுமதி மறுத்தார். இதனால் எதிர் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

;