tamilnadu

img

விரைவில் சபரிமலை விமான நிலையம் அமையும்.... தடை ஏற்படுத்துவோருக்கு அரசு செவிசாய்க்காது.... பினராயி

திருவனந்தபுரம்:
அரசுக்கு சொந்தமான நிலம் என்பதில் நூறு சதவிகிதம் உறுதியானது என்பதால் தான் சபரிமலை விமான நிலையத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

நிலம் கையில் கிடைப்பதற்கு முன்பு எதற்காக ஆலோசகர் நியமிக்கப்பட்டார் என்பது எதிர்க்கட்சி தலைவரின் கேள்வி. சபரிமலை விமான நிலையம் ஒருபோதும் அமைந்து விடக் கூடாது என்று கருதுகிறவர்களால் தான்இப்படி கேட்கவும், பேசவும் முடியும் என செய்தியாளரின் கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார்.

ஆலோசகர் நியமிக்கப்பட்டது சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கு தான். நிலம் கையில் கிடைப்பது வரை அதற்காக காத்திருந்தால் விநாயகர் திருமணம் போல் ஆகிவிடும். கேரளத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு எவ்வளவு விரைவாக இந்த திட்டத்தை அமல்படுத்த அரசு விரும்புகிறது. இடையூறு செய்பவர்கள் கூறுவதைக் கேட்டால் இங்கே ஒரு திட்டமும் இருக்காது என்றுமுதல்வர் கூறினார்.விமான நிலையத்துக்காக செருவள்ளி எஸ்டேட்டின் 2263.18 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு 2020 ஜூன் 18அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. எருமேலி தெற்கு,மணிமலா கிராமங்களில் உள்ள நிலத்தை கையகப் படுத்தவே அரசு முடிவு செய்துள்ளது. ஹாரிசன் மலையாளம் எஸ்டேட்டின் வசமிருந்ததும் பின்னர் கைமாற்றம் செய்யப்பட்டதுமாகும் இந்த நிலம் என முதல்வர் கூறினார்.

;