tamilnadu

img

அட்டாசேயின் குடியிருப்பில் என்ஐஏ சோதனை

திருவனந்தபுரம்:
தங்க கடத்தல் வழக்கை விசாரிக்கும்என்ஐஏ அதிகாரிகள் யுஏஇ தூதரக அட்டாசே வசித்த குடியிருப்பை சோதனையிட்டனர்.ஞாயிறன்று ஏழு பேர் கொண்ட என்ஐஏ குழு மிக ரகசியமாக படூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தது. அட்டாசே ரஷித் காமிஸ் அல் செய்மெலி பயன்படுத்திய வாகனம்,குடியிருப்பின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். அறை பூட்டப்பட்டி ருந்ததால் திறக்க முடியவில்லை. பாதுகாப்பு ஊழியர்களிடம் விவரங்கள் சேகரித்தனர். வாகனம் போன்றவற்றின் புகைப்படங்கள் எடுத்தனர். சுமார் முக்கால் மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. சொப்னாவும் சரித்தும் பலமுறை இந்த குடியிருப்புக்கு வந்த விவரங்கள் கிடைத்தன. அட்டாசேயின் கொண்டாட்டங்களில் இவர்கள் பங்கேற்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர்.

அட்டாசே உட்பட தூதரக அதிகாரிகளான ஐக்கிய அரசு அமீரகத்தைச் சேர்ந்த நான்கு பேர் இங்கு வசித்தனர். 3 மாதங்களுக்கு முன்பு தூதரக ஜெனரலும் யுஏஇக்கு திரும்பி சென்றனர். ஆனால் அட்டாசே இங்கு தங்கியிருந்தார். இவரது பெயரில் தான் இராஜதந்திர பார்சலில் மறைத்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு தங்கம் கொண்டு வரப்பட்டது. தங்கம் பிடிபட்டதைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களில்அட்டாசே இந்தியாவை விட்டு வெளியேறினார். இவரிடம் யுஏஇ விசார ணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது. தற்போது ஒரே ஒரு யுஏஇ குடிமகன் மட்டுமே திருவனந்தபுரத்தில் உள்ளார். 

சுங்கத்துறையினரை  மிரட்டிய அட்டாசே
இராஜதந்திர பார்சலை திறக்காமல் ஒப்படைக்குமாறு சுங்கத்துறையினரை அட்டாசேயும் மிரட்டியுள்ளார். ஜூன் 30 ஆம் தேதி திருவனந்தபுரம் விமானநிலையத்துக்கு பார்சல் வந்தது. அதில் தங்கம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகலைத் தொடர்ந்து பார்சலை எடுக்க விடாமல் சுங்கத்துறையினர் தடுத்து வைத்தனர். பார்சலை எடுக்க முதலில் சரித்தும் அட்டாசேயும் சேர்ந்து வந்துள்ளனர். ஆனால், பார்சலை எடுக்கஅனுமதிக்காததால் இவரும் தகராறு செய்து அதிகாரிகளை மிரட்டினர்.தொழில்நுட்ப கோளாறு என தெரிவித்த பிறகும் பார்சலை உடனே விடுவிக்க வேண்டும் என பிடிவாதம் செய்தனர். எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்த போது இராஜிய உறவு பாதிக்கும் என்றும் அட்டாசே மிரட்டியுள்ளார். அப்போதும் பார்சலை விடுவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். அப்போது பார்சலை யுஏஇக்கு திருப்பி அனுப்புமாறு கூறி விட்டு இருவரும் திரும்பினர். பார்சலை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அட்டாசேயை அதிகாரிகள் அழைத்தனர். அவரது முன்னிலையில் பார்சலைத் திறந்து தங்கத்தை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து பார்சல் தனக்குவந்ததல்ல எனக் கூறி அட்டாசே திரும்பியுள்ளார்.
 

;