games

img

வினேஷ் போகத் வழக்கு - இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு?

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் விவகாரம் தொடர்பாக, இன்று இரவு 9.30க்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 50 கிலோ எடைப்பிரிவில் விளையாட வேண்டிய நிலையில், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததாகக் கூறி திடீரென தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் வியப்புக்குள்ளாக்கியது. இதைதொடர்ந்து விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் வினேஷ் போகத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவருக்கு வெள்ளிப்பதக்கமாவது தர வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.  

அதேசமயம், இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் முறையிடப்பட்டது. இந்த மனு மீது வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெறுவதற்கு முன்பே தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதித்தீர்ப்பு வழங்கப்படுவதற்கான கால அவகாசத்தை செவ்வாய்க்கிழமை(ஆக. 13) வரை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் நீட்டித்திருந்தது.

இந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுமா? என்பது இன்று இரவு 9.30க்கு வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.