tamilnadu

img

சிஏஏ குறித்த எல்டிஎப் அரசின் கொள்கைக் குறிப்பு

கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் வாசித்தார்

திருவனந்தபுரம், ஜன.29- குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கேரள அரசின் கொள்கை குறிப்பை ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது உரையின் பகுதியாக  மாநில சட்டமன்றத்தில் வாசித்தார்.  குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்ய வேண்டும் என கேரள சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடுத்தது. இதற்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் கேரள சட்டமன்றத்தின் 2020ஆம் ஆண்டின் முதலாவது கூட்டம் புதனன்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. ஆளுநர் உரை என்பதே மாநில அரசின் கொள்கை குறிப்பாகவும், சாதனைகளின் தொகுப்பாகவும் அமைவது வழக்கம். அந்தவகையில் மாநில அமைச்சரவை அங்கீகரித்த இந்த உரையை சட்டமன்றத்தில் ஆளுநர் வாசித்தார். 

தனிப்பட்ட முறையில் தனக்கு இதில் மாறுபாடு உள்ளது. ஆனால், முதல்வரிடம் உள்ள மரியாதை நிமித்தம் வாசிப்பதாக கூறிவிட்டு, ஆளுநர் உரையின் 18ஆவது பத்தியில் குறிப்பிட்டிருந்த அரசின் கொள்கை குறிப்பை வாசித்தார். அதில், ‘நமது குடியுரிமை, அரசமைப்பு சாசனத்தின் அடிப்படை அம்சமான மதச்சார்பின்மைக்கு எதிராகவோ, மதத்தின் அடிப்படையிலோ அமையக் கூடாது. நமது அரசமைப்பு சாசனத்தின் கீழ் உள்ள முக்கிய கொள்கைகளுக்கு முரணானது என்பதால் 2019 குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் இந்த மகத்தான அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எனது அரசு அரசமைப்பு சாசனத்தின் 131ஆம் விதியின் படி மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் முன்பு ஒரு வழக்கு மனு தாக்கல் செய்தது’ என குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த குறிப்பை தன்னால் வாசிக்க இயலாது என ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறிவந்தார். இந்நிலையில், புதனன்று காலை முதல்வர் பினராயி விஜயன் ஆளுநரை நேரில் சந்தித்தார். அப்போது அவர் அளித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: என்ன காரணத்துக்காக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான விமர்சனம் கொள்கைக்குறிப்பு உரையில் இடம்பெற்றுள்ளது என்பதற்கு விளக்கம் கேட்கும் தங்களது கடிதம் நள்ளிரவில் கிடைத்தது. கவனமாக அதை நான் படித்தேன். மாண்புமிகு ஆளுநர் சுட்டிக்காட்டிய பிரச்சனைகள் பலவற்றுக்கும் தெளிவான விளக்கம் தங்களிடம் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறு பதிலை தங்களிடம் அளிப்பது, தாங்கள் வழங்கவிருக்கும் கொள்கைக்குறிப்பு உரையின் பொருட்டாகும். 

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்தான மாநில அரசின் சந்தேகம், நிச்சயமாக ஆளுநர் நிகழ்த்தவிருக்கும் கொள்கை குறிப்பு உரையிலும் இடம்பெறத்தக்கதாகும். அரசமைப்பு சாசனத்தின் 176 ஆவது பிரிவின்படி, அமைச்சரவையின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் கொள்கைக் குறிப்பு உரை தயாரிக்கப்படுகிறது. அமைச்சரவை ஒருமனதாக அங்கீகரித்த கொள்கைக் குறிப்பை முழுமையாக தாங்கள் வாசிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். அதில் கூட்டுதல், குறைத்தல் கூடாது” எனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.  இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட பிறகே ஆளுநர் தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு அரசின் கொள்கை குறிப்புடன் கூடிய உரையை சட்டமன்றத்தில் வாசித்தார்.

எதிர் கட்சியினர் முழக்கம்

உரையை வாசிக்க சட்டமன்றத்திற்கு வந்தபோது, ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக பதாகை ஏந்தி எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.  எதிர்க் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா உள்ளிட்டோரை சட்டமன்ற காவலர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். பின்னர் அவையின் வெளிப்புறத்தில் ‘ஆளுநரே திரும்பிப் போ, மத்திய அரசே ஆளுநரை திரும்பப் பெறு’ என முழக்கமிட்டனர்.
 

;