tamilnadu

img

திருவனந்தபுரம் மேயராக கே.ஸ்ரீகுமார் தேர்வு மாநகராட்சியை தக்கவைத்தது எல்டிஎப்

திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக எல்டிஎப் வேட்பாளர் கே.ஸ்ரீகுமார் (சிபிஎம்) தேர்ந்தெடுக்கப்பட்டார். செவ்வாயன்று காலை கவுன்சில் ஹாலில் நடந்தவாக்கெடுப்பில் யுடிஎப் வேட் பாளர் டி.அனில் குமாரும், பாஜக வேட்பாளர் எம்.ஆர்.கோபனும் தோல்விஅடைந்தனர்.திருவனந்தபுரம் மேயராக இருந்த வி.கே.பிரசாந்த் வட்டியூர்காவு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து புதிய மேயர் தேர்தல்நடைபெற்றது. மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டதால் இரண்டு சுற்றுகளாக வாக்கெடுப்பு நடைபெற்றது. குறைவான வாக்குகள் பெற்ற டி.அனில் குமார் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தார். இரண்டாவது சுற்றில் ஸ்ரீகுமாரும் பாஜகவின் எம்.ஆர்.கோபனும் நேருக்கு நேர் மோதினர். முதல் சுற்றில் மொத்தமுள்ள 99 ஓட்டுகளில் கே.ஸ்ரீகுமார் 42 ஓட்டுகளும், எம்.ஆர்.கோபன் 34 ஓட்டுகளும் டி.அனில்குமார் 20 ஓட்டுகளும் பெற்றனர். காங்கிரஸ், பாஜக, உறுப்பினர்களின் 2 ஓட்டுகள் செல்லாதவை. சுயேட்சை உறுப்பினர் யாருக்கும் வாக்களிக்கவில்லை. இரண்டாவது சுற்றிலும் ஸ்ரீகுமாருக்கு 42 ஓட்டுகள், கோபனுக்கு 34 ஓட்டுகள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து கே.ஸ்ரீகுமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சாக்க வார்டு கவுன்சிலரும் மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவருமான கே.ஸ்ரீகுமார் சிபிஎம் வஞ்சியூர் வட்டாரக்குழு உறுப்பினராவார். 100 உறுப்பினர்களைக் கொண்ட மாநக ராட்சியில் கட்சிகளின் பலம் எல்டிஎப் - 42,பாஜக - 35, யுடிஎப் – 21, சுயேட்சை – 1, வி.கே.பிரசாந்த் வெற்றி பெற்ற கழக்கூட்டம் வார்டு காலியாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் கே.கோபால கிருஷ்ணன் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆனாவூர் நாகப்பன், சிபிஐ மாவட்ட செயலாளர் ஜி.ஆர்.அனில்உள்ளிட்டோர் வாக்கு எண்ணிக்கையின் போது உடனிருந்தனர்.

;