நியூஸிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரான வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூஸிலாந்து வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் மிடில் ஆர்டர் வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 68.1 ஓவர்களில் 165 ரன்களுக்கு சுருண்டது.
பின்னர் தனது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி, கேப்டன் வில்லியம்சனின் (89) சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 100.2 ஓவர்களில் 348 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 183 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி தொடக்கத்திலேயே திணறியது. வழக்கம் போல மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்ப தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் (58) மட்டும் தனி ஒருவராக போராடி அரைசதமடித்து அடுத்த சில நிமிடங்களில் பெவிலியன் திரும்பினார். அதிகம் எதிர்பார்த்த ரஹானே (29), விஹாரி (15) சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி நியூஸிலாந்து அணியை விட 8 ரன்கள் கூடுதலாகப் பெற்று 2-வது இன்னிங்ஸை (81 ஓவர்களில் 191 ரன்கள்) நிறைவு செய்தது. 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகவும் சுலபமான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 1.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நியூஸிலாந்து அணியுடன் தோல்வி கண்டாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் முதலிடத்துக்கு ஆபத்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிரட்டிய பவுன்சர்.... மிரண்ட இந்திய அணி
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பங்குபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானம் பவுன்சருக்கு சற்று சாதகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும், போட்டி தொடங்கும் போது வழக்கமான நிலையில் தான் இருந்தது. முதல் நாள் ஆட்டத்தின் நடுப்பகுதியில் திடீரென மழை பெய்ய ஆடுகளத்தின் தன்மை மாறியது. குளிர்காற்றும் தொடர்ந்து வீசியதால் மைதானம் உயிரோட்டமாக மாற இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலை உருவாக்கியது. சாதாரண வேகத்தில் வீசப்படும் பந்துகள் பவுன்சராக எகிறியது. இதனால் இந்திய வீரர்கள் ரன் சேர்க்க முடியாமல் திணறினர். எந்தவொரு போட்டியாக இருந்தாலும் மைதானத்தின் தன்மை திடீரென மாறினால் போட்டியை நடத்தும் நாடே வெற்றியை ருசிக்கும். இதே நிகழ்வு தான் வெல்லிங்டன் டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்துள்ளது. புரியும் படி சுருக்கமாகச் சொன்னால் இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் தோற்கவில்லை. வெல்லிங்டன் மைதானத்திடம் தான் தோற்றது.