12-வது சீசன் உலகக் கோப்பை தொடரில் கோப்பை வெல்லும் அணியாகக் கருதப்பட்ட தென் ஆப்பிரிக்கா அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ரவுண்ட் ராபின் சுற்று நிறை வடைந்ததும் நாடு திரும்ப தயாராகி வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்குத் தனது சாதனை மூலம் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஆறுதல் அளித்துள்ளார். உலகக் கோப்பைகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட்டின் (38) சாதனையை இம்ரான் தாஹிர் (39) முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஒட்டுமொத்த பந்துவீச்சாளர்களில் இம்ரான் தாஹிர் 5-வது இடத்தில் உள்ளார். மெக்ராத் (ஆஸ்திரேலியா - 71) முதலிடத்திலும், முரளிதரன் (இலங்கை - 68), வாசிம் அக்ரம் (பாகிஸ்தான் -55) இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திலும், ஜாகீர்கான், ஸ்ரீநாத் (இந்தியா - 44) ஆகியோர் 4-வது இடத்திலும், இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா - 39) 5-வது இடத்திலும் உள்ளார். மேலும் முதல் பந்தை வீசியவர், முதல் விக்கெட்டை வீழ்த்தியவர், உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் பந்தை வீசிய சுழற்பந்துவீச்சாளர் உள்ளிட்ட பெருமைகளும் இம்ரான் தாஹிர் பெற்றுள்ளார். 40 வயதாகும் இம்ரான் தாஹிர் 12-வது சீசன் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்.அரையிறுதிக்குத் தகுதி பெறாத ஏக்கத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு தனது சாதனைகள் மூலம் ஆறுதல் அளித்துள்ளார்.