tamilnadu

img

மழையின் உதவியால் கர்நாடகா சாம்பியன்

விஜய் ஹசாரே கோப்பை 

இந்தியாவின் மிகப்பெரிய ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின.   கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கர்நாடக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி தொடக்கத்தில் திணறினாலும் அபினவ் முகுந்த் (85), பாபா அபராஜித் (66) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கர்நாடக அணி தரப்பில் அதிகபட்சமாக மிதுன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய கர்நாடக அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடக்க வீரர் பட்டிகல் (11) மட்டும் சொதப்ப கே.எல். ராகுல் (52), மயாங் அகர்வால் (66) ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்து வலுவான நிலையில், அடித்தளம் அமைத்த நிலையில், மழை திடீரென  களமிறங்கி தனது இன்னிங்ஸை விளையாடியது. மழையின் இன்னங்ஸிற்காக இரு அணி வீரர்களும் காத்திருந்து சோர்வடையவே விஜெடி (VJD) விதிமுறை மூலம் கர்நாடக அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.         இதன் மூலம் கர்நாடக அணி 60 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 

ஹெல்மெட்டில் பிசிசிஐ முத்திரை...அஸ்வினுக்கு சிக்கல் 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அஸ்வின் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்தவுடன் விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடினார்.  இந்த ஆட்டத்தில் அஸ்வின் இந்திய அணிக்காக பயன்படுத்தும் பிசிசிஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டைப் பயன்படுத்தியுள்ளார். இது விதிமுறையை மீறிய செயலாகும். உள்ளூர் போட்டியில் விளையாடும் போது பிசிசிஐ முத்திரை  கொண்ட ஹெல்மெட்டைப் பயன்படுத்தக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும் பிசிசிஐ முத்திரையை டேப்பால் மறைக்க வேண்டும்.  ஆனால் அஸ்வின் அவ்வாறு மறைக்காமல் பிசிசிஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டை பயன்படுத்தியதன் மூலம் விதிமுறையை மீறியுள்ளது உறுதியாகிவிட்டது. எனினும் கள நடுவர்கள் இந்த விவகாரம் பற்றி போட்டி நடுவரிடம் புகார் அளிக்கவில்லை. அவர்கள் புகார் அளித்தால் மட்டுமே அஸ்வின் மீது அபராத நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.