மற்ற நாடுகளில் கிரிக்கெட் வாரியங்கள் அரசு மேற் பார்வையில் செயல்பட்டா லும், பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படாமல் தன்னிச்சையான அமைப்பாகச் செயல்பட்டுவருகிறது. பிரச்சனை ஏதேனும் உருவானால் உச்சநீதிமன்றம் சென்று அதற்கான கமிட்டியை நியமித்துக் கொள்ளும். மற்றபடி மத்திய அரசு உத்தரவைப் பற்றி கண்டுகொள்ளாது. இதுதான் பிசிசிஐ-இன் அதிகாரம் ஆகும். இந்த அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு, ஊக்க மருந்து பிரிவு மூலம் காய் நகர்த்தி அதில் வெற்றி பெற்றுள்ளது. நாடா (NADA - National Anti-Doping Agency) என அழைக்கப்படும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஊக்க மருந்து சோதனை அமைப்பின் கீழ் செயல்படுமாறு மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. விளையாட்டு அமைச்ச கத்தின் அதிகார வரம்பு எல்லைக்குள் கிரிக்கெட் கிடையாது என்று கூறி பிசிசிஐ மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா ஊக்க மருந்து சோதனை யில் சிக்கி தடை உத்தரவு பெற்ற நிலையில், அதனைக் காரணம் காட்டி ஊக்க மருந்து தடுப்பு சோதனையைத் தவிர்த்து வேறு வழி கிடையாது என பிசிசிஐ-யை மிரட்டல் தொனியில் மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிக்கை அனுப்பியது. பிசிசிஐ அரை மனதுடன் சில கோரிக்கைகளுடன் சம்மதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.