தேசிய கல்விக் கொள்கை கருத்து கேட்புக் கூட்டம் சிபிஎம் கோரிக்கை
காஞ்சிபுரம், ஜூலை 24- மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கையை நிறைவேற்ற பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருத்து கேட்க பொதுமக்கள், ஊடகங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவியல் இயக்கம், மாணவர்கள், வாலிபர்கள், மாதர் சங்கம், சிபிஎம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தகவல் தெரிவிக்கும் விதமாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் வட்டச் செயலாளர் இ.லாரன்ஸ், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய 3 பேர் கைது
சென்னை, ஜூலை 24- அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி கோபி என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றார். அவர் தனது ஏ.டி.எம். கார்டை எந்திரத்துக்குள் செலுத்தியபோது சிக்கிக் கொண்டது. வழக்கத்துக்கு மாறாக எந்திரத்தில் சிறிய கேமராவுடன் கூடிய ஒரு கருவி பொருத்தப்பட்டு இருந்தது. இது பணம் எடுக்க வருபவர்களின் ரகசிய எண்களை பதிவு செய்து பணம் திருடுவதற்கான ‘ஸ்கிம்மர்’ கருவி என்பது தெரிந்தது. இதுகுறித்து கோபி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அயனாவரம் காவல்துறை யினர் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று நேரில் பார்வை யிட்டனர். அங்கிருந்த ஸ்கிம்மர் கருவியை அகற்றினர். பின்னர், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ‘ஸ்கிம்மர்’ கருவியை பொருத்தியவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், அயனாவரம் ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி கொள்ளையடிக்க முயன்றது இர்பான், அல்லாபகாஸ், அப்துல்ஹாதி என்பது தெரிய வந்துள்ளது. இவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை ரத்து
சென்னை,ஜூலை 24- முத்துக்குமரன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான 14 கட்டிடங்கள் அனுமதி யின்றி கட்டப்பட்டு ள்ளதாக சிஎம்டிஏ கூறியுள்ளது. அந்த கட்டிடங்களை இடிப்பதற்கும், அவற்றினை பூட்டி சீல் வைப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்கைக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும், 2019 -20ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்ப்பதற்கான தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அளிக்கப்பட வில்லை என மருத்துவக் கல்வி இயக்குநகரத்துக்கு மருத்துவ பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.