செங்கல்பட்டு, ஆக.6- காஞ்சிபுரம் மாவட்டம் ஈசூர் வல்லிபுரம் இடையே கட்டப்பட்டு வரும் தடுப்பணையிலிருந்து ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய்க ளைச் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் குறுக்கே பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். இவர்களின் நீண்டகாலப் போராட்டத்துக்குப் பின்னர், ஈசூர்-வல்லிபுரம் கிராமப்பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க, தமிழக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.30.90 கோடி நிதி ஒதுக்கியது. இதற்கான பணிகள் கடந்த ஜனவரி மாதம் துவங்கி நடை பெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது அடிக்கடி மழை பொழிந்து வருவதால், ஆற்றுப்படுகையில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பாலாற்றின் இருகரையோரங்களிலிருந்து கால்வாய்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 50-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்குப் பாலாற்று நீரைக் கொண்டு சென்று விவசாயம் செய்யப்பட்டுவந்தது. தற்போது கால்வாய்கள் அனைத்தும் பராமரிக்கப்படாததால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பாலாற்றிலிருந்து ஏரிகளுக்குத் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நேரு கூறியதாவது:- தடுப்பணையில் தண்ணீர் தேங்கினால், பாலாற்றின் கரை யோரத்தில் உள்ள புதூர் ஏரி, பள்ளிப்பட்டு, புலிப்பரகோயில் மற்றும் ஆனூர், வல்லிபுரம், பாண்டூர், விளாகம், நெரும்பூர், லட்டூர், சூரடி மங்களம் தாங்கல், மற்றும் பெரிய ஏரி உள்பட 30க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு ஆற்றுப்படுகையில் இருந்து நேரடியாகத் தண்ணீர் செல்லும். இந்த ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்குத் தண்ணீர் செல்லும். ஆனால், ஆனூர் பெரிய கால்வாய் முதல் அனைத்து நீர்வரத்து கால்வாய்களும் பராமரிப்பு இன்றி உள்ளது. இந்த கால்வாய்களை முழுவது மாக சீரமைத்து, கட்டமைப்புச் செய்தால் மட்டுமே ஏரிகளுக்குத் தண்ணீர் செல்லும். விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்தை பெருக்க முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் பாலாற்றில் கட்டப்படும் தடுப்பணை பகுதியிலிருந்து ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய்களை கண்டறிந்து அவற்றை தூர்வாரி கட்ட மைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றார்.