திருப்போரூர், அக்.21- திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட இருளர் மக்களுக்கு மனைபட்டா, தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி இருளர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட தையும், காயார், சின்னகாயார், அனுமந்தபுரம் தர்காஷ், குப்பத்துக்குன்று, தண்டரை, ஆலத்தூர், கரும்பாக்கம், கொட்டமேடு, ஏகாட்டுர், பட்டிபுலம், சிறுசேரி, மாம்பாக்கம், புதுப்பாக்கம், சாத்தம்குப்பம், நாவலூர், படுர், பணம்காட்டுபாக்கம், கொளத்தூர், ஒரத்தூர் ஆகிய கிராமங்களில் இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிமனை பட்டா இல்லாத காரணத்தால் அரசின் நலத்திட்டங்களை பெறமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும், சிறுச்சேரி, மாம்பாக்கம், புதுபாக்கம், கீழ் கோட்டையூர் பகுதிகளில் 75 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கான வீட்டுமனையை ஒப்படைக்க வேண்டும், புறம்போக்கு நிலங்களில் வாழ்ந்துவரும் இருளர் மக்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கி, அவர்களுக்கு தரமான தொகுப்பு வீடுகளை அரசே கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், இருளர் மக்கள் சங்கம், பழங்குடி மக்கள் இயக்கம், இருளர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (அக். 21) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சி இருளர் மக்கள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் சொர்னலதா தலைமை தாங்கினார். இதில் மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் எம்.அழகேசன், பழங்குடி மக்கள் விடுதலை இயக்க செயலாளர் ராணி, இருளர் முன்னேற்ற நலவாழ்வு சங்க நிர்வாகி வசந்தா, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், செயலாளர் கே.நேரு, சிபிஎம் பகுதிச் செயலாளர் எம்.செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். முன்னதாக வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்களைச் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.