செங்கல்பட்டு,அக்.31- பாலாற்றின் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் இருபுற கரைகளிலும் மண் சரிவு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதற்கு தரமற்ற பணியே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க 2018 ஆம் ஆண்டு ரூ.30.90 கோடி நிதியை அரசு ஒதுக்கியது. இனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழையால் பாலாற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரைச் சேமிக்கத் தடுப்பணை தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 5 ஆம் தேதி தமிழக முதல்வர் தடுப்பணை யை திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வல்லிபுரம் தடுப்பணையில் சுமார் 2 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேங்கி உள்ளது. முதல் முறையாகத் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி யுள்ளதால் பாலாற்றை ஒட்டியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தடுப்பணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்காக இருகரைகளை ஒட்டி கதவணைகளுடன் கூடிய தலா 6 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. மதகு பகுதியிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவுக்குக் கரைகள் அமைக்கப்பட்டுள்ளது. நீரோட்ட த்தின் போது கரைகளில் மண் சரியாமல் இருப்பதற்காக கான்கீரிட் தடுப்புகள் மற்றும் கருங்கற்கள் கரைகளில் பதிக்கப்பட்டுள்ளன. இந்த கரைகள் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழைக்கு தாக்கு பிடிக்காமல் கருங்கற்கள் மற்றும் மண் சரிந்து ஆற்றில் விழுந்துள்ளது. மேலும் பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டால் கரைகள் முற்றிலும் சரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கரைகளில் மண் சரிந்துள்ளதால் தடுப்பணையின் கட்டுமானப் பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்த பிறகே அணையை திறக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு கூறுகையில், ‘வல்லிபுரம் தடுப்பணையின் இருகரைகளும் மண் சரிவு ஏற்பட்டுச் சேத மடைந்துள்ளது. இதற்கு தரமில்லாத நடைபெற்றுள்ள பணிகளே காரண மாகும். மேலும், கதவணைகள் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், தடுப்பணையில் தண்ணீர் திறந்தாலோ அல்லது அணை நிரம்பி உபரி நீர் வெளியேறினால் கரைகள் சேதமடைந்து ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே தரமற்ற பணிகள் செய்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், முதல்வர் தடுப்பணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் அணையைத் திறக்க வேண்டும்’ என்றார்.