tamilnadu

img

வறுமையின் கோர முகம்... ஆட்சியாளர்களின் அலட்சியம்... அதிகரிக்கும் தீக்குளிப்பு முயற்சிகள்

தமிழகத்தில் ஆளும் ஆட்சியாளர்களின் தொடர் அலட்சியத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு திங்கள் தின குறைகேட்பு கூட்டங்களிலும், விவசாயிகள் குறைதீர் கூட்டங்களிலும் தங்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை எனக்கூறி தங்கள் மேல் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயலும் அப்பாவி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி அண்ணாநகர் தென் கீரனூரில் வசித்துவரும் வெள்ளைகாசி என்பவரின் மகன் ரவிக்குமார். இவர் கால்கள் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டதுபோல் வலுவிழந்து போன நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி ஆவார். இதனால் இவரால் பிறரைப்போல் உழைத்து வருமானம் ஈட்ட முடியாத நிலையில் வறுமையில் வாடியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான பழைய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இது அடிக்கடி பழுதானதால் செலவு செய்ய இயலாத நிலையில் தனக்கு மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர் ஒன்றை வழங்க வேண்டும் எனக் கோரி ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமும், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியரிடத்திலும், ஒன்றிய அலுவலகத்திலும் கடந்த பல ஆண்டுகளாக மனு அளித்து வந்துள்ளார். ஆனால் இன்றுவரை இவருக்கு ஸ்கூட்டர் கிடைக்கவில்லை. இதனால் வறுமையில் வாடும் தனக்கு எந்தவித நலத்திட்ட உதவியும் கிடைக்கவில்லை என்ற மனவேதனையில் திங்கள்கிழமை (டிசம்பர் 30) அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரவிக்குமார் தன்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார். அங்கிருந்த பொதுமக்களும், காவல்துறையினரும் உடனடியாக அவரை தடுத்து காப்பாற்றியுள்ளனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா உடனடியாக ரவிக்குமார் இருந்த இடத்திற்கு வந்து அவரிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதோடு மீண்டும் இவ்வாறு எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என எச்சரித்தார். அப்போது அவரிடம் ரவிக்குமார் “பல ஆண்டுகளாக ஓடிய அதிகாரிகளிடம் மனு அளித்தும் தனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை” எனக்கூறி கதறி அழுதுள்ளார். தன்னுடைய பாதிக்கப்பட்ட கால்களையும் நேரடியாக காட்டி ஸ்கூட்டர் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் கேட்டார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இப்படிப்பட்ட தீக்குளிப்பு முயற்சிகள் என்பது தொடர்ந்து வருகிறது. ஆட்சியாளர்கள் பகட்டு விளம்பரங்கள் மூலம் ஏராளமான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அறிவித்தாலும், அவை உரியவர்களுக்கு முறையாக போய் சேர்வதில்லை என்பது இப்படிப்பட்ட ஏழைகளின் தீக்குளிப்பு முயற்சிகள் மூலம் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. -சாமிநாதன், எஸ்.சித்ரா

;