tamilnadu

அரவக்குறிச்சியில் 84.33 சதவீதம் வாக்குப் பதிவு பள்ளபட்டி சௌந்திராபுரத்தில் 1.15 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்

கரூர், மே 20-கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் 84.33 சதவீதம் வாக்குப் பதிவானது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தல் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இறுதி வாக்காளர் பட்டியல்படி 2,05,273 வாக்காளர்கள் இருப்பதாகவும், அதில் ஆண்கள் 93,052 பேரும்,பெண்கள் 1,06,219 பேரும் என அறிவிக்கப்பட்டிருந்தனர். தேர்தல் இறுதி களத்தில் 63 பேர் இருந்தனர். அவர் களில் திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், அமமுக வேட்பாளர் சாகுல்அமீது, மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜ், உழவர் உழைப்பாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதிகுமார் உள்ளிட்டோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் கூட்டணிகட்சித் தலைவர்கள், கட்சியின் முன் னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.கடந்த கடந்த 15 நாளாக நடைபெற்ற பிரச்சாரம் கடந்த 17-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. 250 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இதில்பதற்றமான வாக்குச்சாவடிகள் எனகண்டறியப்பட்ட 29 வாக்குச்சாவடிகளுக்கும் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டது.அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பள்ளபட்டி மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் எனநீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் ஒரு முதியவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து வாக்களிக்கச்செய்தனர். முதன் முதலாக வாக்களிக்கும் இளைஞர்களும், இளம்பெண் களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.காலையில் வாக்குப்பதிவு துவங்கியதும் பள்ளபட்டி சௌந்திராபுரத்தில் பூத் எண் 195ல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1,2,3 என வரிசையாக வைக்கப்படாமல் 1,3,2,4 என வைக்கப்பட்டிருந் தது. இதன் புகாரில் அவை சீராகவைக்கப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவுதுவங்கியது. இதனால் சுமார் ஒன்னேகால் மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. இதே போல சின்னதாராபுரம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் வாக்குப்பதிவு துவங்கிய போது மின்தடை ஏற்பட்டது. இதனால் 7.15 மணிக்கே வாக்குப்பதிவு துவங்கியது. கடந்த மாதம் 18-ம் தேதி மக்களவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதிமக்களும் பங்கேற்றதால், இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைவரது இடதுகையின் நடுவிரலில் மை வைக்கப்பட்டது. காலை 9 மணி நிலவரப்படி 10.51 சதவீத வாக்குகளும், 11மணிக்கு 34.24 சதவீதமும், ஒரு மணிக்கு52.68 சதவீதமும், 3 மணிக்கு 66.38, மாலை5 மணிக்கு 79.49 சதவீதமும், மாலை 6 மணிக்கு 84.33 சதவீதம் வாக்குப் பதிவுநடைபெற்றது.

;