tamilnadu

கூலித் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் அவதி கடையல் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆட்சியர் மனு

நாகர்கோவில், ஆக.13- கேரள எல்லையோரமாக உள்ள கடையல் பேரூராட்சி பகுதியிலிருந்து கேரளா பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் கடந்த நான்கு மாதங்களாக மாவட்ட நிர்வாகம் மண்ணை நிரப்பி அடைத்துள்ளதால் வேலைகளுக்கு செல்ல முடியாமல் ஏழைகூலி தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். எனவே உடனே இச்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடையல் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.சேகர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்துள்ள மனு விபரம் வருமாறு: கன்னியாகுமரி மாவட்டம் கடையல் பேரூராட்சி முற்றிலும் ரப்பர் தோட்ட பகுதிகளையும், மலை காடுகளையும் கொண்ட 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் புறம்போக்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மாவட்டத்திலுள்ள பழங்குடி மக்களில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பஞ்சாயத்திற்குட்பட்ட மலைகிராமங்களில் வசித்து வருகிறார்கள்.  

இப்பஞ்சாயத்தோடு இணைந்த கேரளா பகுதியை இணைக்கும் ஆரல்வாய்மொழி - நெடுமங்காடு மலையோர சாலை, ஆறுகாணி பகுதி வழியாக செல்லும் கிராம நெடுஞ்சாலை ஆகிய இரு முக்கிய சாலைகள் உள்ளன. இச்சாலைகளை கோவிட் -19 ஊரடங்கை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மண்ணை போட்டு முற்றிலுமாக அடைத்து நான்கு மாதங்களாகிறது. ஆறுகாணி சாலை அடைக்கப்பட்டுள்ளதால் பழங்குடிகள் உள்ளிட்ட கூலி தொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்கள் தொடர்பாக கடந்த மே 11 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நேரடியாக நிலைமை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து சார் ஆட்சியர் மற்றும் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் மற்றும் விளவங்கோடு வட்டாட்சியருக்கும் மனுக்களை அளித்து இதுதொடர்பான விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன.  ஆனால் இதுநவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது வருத்தமளிப்பதாக உள்ளது.  இச்சாலையை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தை ஏன் வலியுறுத்துகிறோம் என்றால் மாவட்டத்திலுள்ள மற்ற பகுதிகளைப் போல் மலையோரப்பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக இல்லை.

பத்துகாணி அரசு மருத்துவமனையில் ஒரு செவிலியருக்கு தொற்று இருப்பதை உறுதி செய்த நிலையில் இப்பகுதியில் 5 பேர் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம்பெற்று வீடு திரும்பி மாதங்கள் தாண்டிவிட்டன.  மலையோரப் பகுதியிலுள்ள பழங்குடிகள் உள்ளிட்ட பெரும்பாலான கூலி தொழிலாளர்கள் தங்களது வேலையிலிருந்து துவங்கி, மருத்துவம், வியாபாரம், மலைப்பகுதி விளை பொருட்களை விற்றல், வேறுபொருட்களை வாங்குதல் போன்ற எல்லாவற்றிற்குமே கேரள எல்லையோர கிராமங்களை நாடுகிறார்கள். மொழியாலும் பந்தங்களாலும் இணைக்கப்பட்டுள்ள இப்பகுதி பழங்குடிகள் மற்றும் வேறு சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் கேரளா பகுதியில் உள்ளவர்களோடு திருமண உறவுகளை அங்கும் இங்குமாக வைத்து கொண்டுள்ளார்கள்.  இந்த விஷயங்களை கவனத்தில் எடுத்து இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி கூலிவேலைகளுக்காக இருவர் என்கிற அளவில் காலை 6  மணிக்கே புறப்பட்டு செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை மேலும் பாதிக்கப்படாமல் இருக்க அருகாமையில் இருக்கும் ஆறுகாணி காவல்நிலையத்தை பயன்படுத்தி மிகுந்த கட்டுப்பாடுகளோடு போடப்பட்டுள்ள மண்ணை அகற்றி ஆறுகாணி சாலையை திறந்துவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;