tamilnadu

முகநூல் நண்பர் திருமணத்துக்கு வந்தவர்கள்: பேரலையில் சிக்கி பெண் உட்பட இருவர் பலி

நாகர்கோவில், ஏப்.25-கன்னியாகுமரி மாவட்டம், இனயம் புத்தன்துறையை சேர்ந்தவர் வினோபின் ராஜ் (30). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தஇவருக்கு, புதனன்று இனயம் புத்தன்துறையில் திருமணம் நடந்தது. திருமண விழாவுக்கு, தனது முகநூல் நண்பர்களான திருப்பூர் பகுதியை சேர்ந்த சங்கீதா (24), சேலத்தை சேர்ந்த  மோகன் (35) உள்ளிட்டோருக்கு, வினோபின்ராஜ் அழைப்பு விடுத்தார்.திருமண விழாவில் பங்கேற்ற சங்கீதா, மோகன் உள்பட 7 பேர் அப்பகுதியில் உள்ளஇனயம் புத்தன்துறை கடற்கரையை சுற்றி பார்க்க சென்றனர். கடற்கரையில் நின்றிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சங்கீதாவும், மோகனும் சிக்கினர். இதை கண்ட மற்றவர்கள் இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் மோகன் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டார். மீட்கப்பட்ட சங்கீதாவை மட்டும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சங்கீதா, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர், சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், காணாமல் போன மோகனை தேடி வந்தனர். இந்நிலையில், வியாழனன்று மோகனின் உடலை மீனவர்கள் உதவியுடன் காவல் துறையினர் மீட்டனர். பலியான மோகன் சேலத்தில்காய்கறி வியாபாரமும், சங்கீதா திருப்பூரிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் வேலை பார்த்து வந்தார். நண்பர்திருமணத்துக்கு வந்த இடத்தில் 2 பேர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

;