tamilnadu

img

கடலூரில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் 19 பேர் மீட்பு

கடலூர், ஜூன் 22- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி  அருகிலுள்ள பரவத்தூர், ஆந்திர மாநிலம்  ஓங்கோல் மாவட்டம் பிரகாஷ் ஜில்லாவைச்  சேர்ந்த 19 பேர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி  வட்டாரப் பகுதியில் குடும்பத்துடன் தங்கியி ருந்து சவுக்கு மரம் வெட்டும் தொழி லில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களை திருத்தணியைச் சேர்ந்த முகவர் முன்பணம் கொடுத்து கொத்தடிமையாக வேலைக்கு பயன்படுத்தி வருவதாக தொண்டு நிறுவனம் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் கடலூர் கோட்டாட்சியர் ப.ஜெகதீஸ்வரன் பண்ருட்டி வட்டம் திருவாமூர் சென்று விசாரணை நடத்தி  19 பேரையும் மீட்டு கடலூர் நகராட்சிப்  பள்ளியில் தங்க வைத்தார். ஞாயிற்றுக்கிழ மையன்று (ஜூன் 21) அவர்களை திருத்தணி வட்டாட்சியரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்திருந்தார்.  ஆனால், “தங்களை கொத்தடிமையாக வேலை வாங்கிய நபர்கள் ஊருக்குச் சென்றா லும் ரூ.10 ஆயிரம் முன்பணத்திற்கு ரூ.1 லட்சம்  தர வேண்டும்.

இல்லையென்றால் தாங்கள் கூறும் வேறு ஊருக்கு கொத்தடிமையாக வேலைக்குச் செல்ல வேண்டும்” என்று மிரட்டி வருகிறார். எனவே, கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டதற்கான சான்றும், கொத்தடிமையாக வேலை வாங்கியவர் மீது உரிய வழக்கும் பதிய வேண்டும் என்று கூறி  திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ஆட்சியர் கடலூர்  கோட்டாட்சியரை சம்பவ இடத்திற்கு  அனுப்பினார் .அவரிடம் பாதிக்ககப்பட்ட வர்கள் “தங்களது குழந்தைகளை முகவர்கள்  பிடித்து வைத்துக் கொண்டு தங்களுக்கு  எதிராக எதுவும் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டுகின்றனர்.  எனவே, தங்களை கொத்தடிமை முறையிலிருந்து முழுமையாக மீட்க வேண்டுமென” கதறினர். இதையடுத்து அவர்களை கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார். பின்னர் சம்பந்தப்பட்டவர் மீது  வழக்குப்  பதிவு செய்ய புதுப்பேட்டை காவல்நிலை யத்திற்கு கோட்டாட்சியர் பரிந்துரை செய்தார்.

;