சிதம்பரம், மே 9-கடலூர் மாவட்டம் கீரைப்பாளையம் ஊராட்சியில் திருப்பணி நத்தம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகப் பழமை வாய்ந்த நல்ல தண்ணி குளம் உள்ளது. இந்த குளத்தைக் கடந்த காலங்களில் செட்டி குளம், கரைமேடு,வாள்காரமேடு, கீரைப்பாளையம், திருப்பணி நத்தம் என 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிநீருக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும், இரவு-பகல் எனகாவலர்களை நியமித்துப் பாதுகாத்து வந்துள்ளனர். தற்போது, 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்திற்கு முறையான பராமரிப்பு இல்லை. இதனால், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி 2 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளம் முழுமைக்கும் ஆகாயத் தாமரை செடிகள் மலர்ந்து அசுத்தமாக உள்ளது. இந்த குளத்தைத் தூர்வாரி ஆழபடுத்தினால் குடிநீருக்கு முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாதவன் தலைமையிலான குழுவினர் மாவட்ட ஆட்சியர், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறையும் கோரிக்கை வைத்தும் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாதவன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், சிவராமன், கிராம பொதுமக்கள் சார்பில் முத்துகிருஷ்ணன், பிரசாத், அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த குளத்தைத் தூர் வாரி ஆழப்படுத்தக்கோரி இம்மாதம் 13 ஆம் தேதி சிதம்பரம் சார் ஆட்சியரை சந்தித்து மனுகொடுப்பது என்றும் அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முத்துகிருஷ்ணன், பிரசாத், அன்பழகன் கூறுகையில்,“ இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால் சுற்றுவட்டாரப் பகுதியில் குடிநீர் தட்டுபாடு இருக்காது. நிலத்தடிநீர் மட்டமும் குறையாது. உப்புநீர் உட்புகாமலும் இருக்கும்” என்றனர்.இக்குளத்தில் தண்ணீர் இருந்தால் கோடைக் காலத்தில் 100 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடியும் செய்ய முடியும். கடந்த ஆண்டு குளத்தில் தண்ணீர் இருந்ததை இதனை நம்பி குறுவை நடவு செய்தோம். இப்ப தண்ணீர் வற்றியதால் நெற் கதிர் வரும் நேரத்தில் அனைத்தும் கருகிவிட்டது என்றும் இந்த குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தூர்வாரி ஆழப்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி கொடுத்தலே இங்குள்ள விவசாயிகள் குளத்தை ஆழப் படுத்தி விடுவார்கள். அதற்காவது அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.